‘தலித் ’ என்ற வார்த்தையை ஊடகங்கள் பயன்படுத்தக் கூடாது – தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்
ஊடகங்கள் செய்தி குறிப்பில் ‘ தலித் ’என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் கடந்த மாதம் தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஊடங்களில் விவாதங்களின் போதும், செய்தி குறிப்பிலும் தலித் என்ற வார்த்தையை உபயோகிப்பத்தை தவிர்க்கும் படி ஊடக வட்டத்திற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிக்கை அளித்துள்ளது. அதில் “ ஊடங்கள் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது. அதற்கு பதிலாக பம்பாய் உயர்நீதிமன்றத்தின் ஆணைபடியும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 341வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அதிகாரப்பூர்வ ஸ்தாபனத்தை கொண்டு மொழிபெயர்ப்பு செய்து குறிப்பிடப்பட வேண்டும் ” என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ கடிதம் கடந்த மாதம் 7ம் தேதி கிடைத்துள்ளதாக பிரபல தொலைக்காட்சி நிறுவனர் ஒருவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பம்பாய் உயர்நீதிமன்றம், தலித் என்ற வார்த்தையை ஊடகங்கள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என தெரிவித்த நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதே உத்தரவு இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களும் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போன்று தான் குறிப்பிடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.