சென்னை: சிவகங்கை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குறுக்கு விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு உயர்நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசம் அளித்திருக்கிறது.

2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார் ப. சிதம்பரம். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை விட 3,354 வாக்குகள் அதிகம் பெற்று  வென்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரது வெற்றி குறித்து அப்போது பல சந்தேகங்களும், யூகங்களும் கிளம்பின. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, தோல்வியுற்ற ராஜ கண்ணப்பன், ப. சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு அவருக்கான அமலாக்கத்துறை காவலை வரும் 30ம் தேதி வரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

அதனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை, ப. சிதம்பரம் திகார் சிறையில் தான் கழிக்க வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், சிவகங்கை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், குறுக்கு விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாத கால அவகாசம் அளித்திருக்கிறது.

இது தொடர்பான வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ப. சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.தியாகராஜன், ஐஎன்எக்ஸ் வழக்கில் சிதம்பரம் கைதாகி சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

எனவே, தேர்தல் வெற்றி தொடர்பான குறுக்கு விசாரணையில் அவர் பங்கேற்க முடியாது என்பதை தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், குறுக்கு விசாரணைக்கு ஆஜராக ப. சிதம்பரத்துக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.