ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான கருப்புப்பண வழக்கை ரத்து செய்து  உயர்நீதிமன்றம் உத்தரவு

--

முன்னாள் மத்திய  நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது அவரின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வாங்கியதாகவும் இதனை வருமானவரி கணக்கில் காட்டவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.  இதையடுத்து மூவர் மீதும் கறுப்புப்பண தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி வருமான வரித்துறையினர் நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்தனர். வருமான வரித்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு தடை கோரி  கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் கறுப்புப்பண தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படாத நிலையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதே நேரம் புகாரானது வழக்காக மாறுவதற்கு முன்பாகவே இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் மீதான கருப்புப் பண தடுப்பு சட்ட நடவடிக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட மூவர்  மீதான வருமான வரித்துறையின் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது