பசிக்கொடுமையால் மணலை உணவாக குழந்தைகள் சாப்பிட்டதா? கேரளாவில் சர்ச்சை

திருவனந்தபுரம்:

ழ்மை காரணமாக உணவுக்கு வழியின்றி பசியால் துடித்த குழந்தைகள், வயிற்றுப் பசிக்கு மணலை அள்ளித்தின்ற நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தை குழந்தைகள் நல அமைப்பும் கையில் எடுத்த நிலையில், அந்த குழந்தைகளின் தாய்க்கு கேரள அரசு வேலை வழங்கி பாதுகாப்பு அளித்துள்ளது.

ஆனால், தனது குழந்தைகள் மணலை சாப்பிடவில்லை என்று அந்த குழந்தையின் தாய் ஸ்ரீதேவி தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் பசிக்கொடுமையால் குழந்தை மண்ணை அள்ளி தின்றதாக கடந்த வாரம் செய்திகள் பரவின. இதுதொடர்பான வீடியோ வாட்ஸ்-அப் உள்பட சமூக வலைதளங்களில் வைரலானது.  இதுதொடர்பாக வைலான வீடியோவில், 2 குழந்தைகள் பசிக் கொடுமையால் அழுதபடி தரையில் கிடந்த மண்ணை அள்ளித் தின்றுகொண்டிருந்த காட்சி மனதை உலுக்கியது. இந்த வீடியோவை பார்ப்பவர்களின் கண்களில் ரத்தக்கண்ணீர் வடிந்தது.

இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என்று கேரள அரசு மீது கடுமையான குற்றச் சாட்டுக்கள் கூறப்பட்டன. மேலும் இந்தியாவுக்கும் இழுக்கை ஏற்படுத்தியது.

இதுபற்றிய தகவல் திருவனந்தபுரம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கும் தெரிவிக்கப் பட்டது. அவர் அந்த வீடியோ காட்சியை பார்த்து விசாரித்த போது குழந்தைகள் மண்ணை அள்ளித்தின்ற இடம் திருவனந்தபுரம் கைதமுக்கு ரெயில்வே புறம்போக்கு பகுதி என்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், அங்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த குழந்தைகளின் தாய் ஸ்ரீதேவி என்பதை கண்டுபிடித்து விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.

விசாரணையில், அந்த பகுதியில்  தார் பாயால் டென்ட் அமைத்து வசித்து வந்த ஸ்ரீதேவியின் கணவர் ஒரு குடிகாரர் என்பதும், அவருக்கு  6 குழந்தைகள் இருப்பதாகவும், மூத்த குழந்தைக்கு 7 வயதும், 6வது குழந்தைக்கு 3 மாதமும் ஆவதாகவும் தெரிய வந்தது.

கணவர் சரியான முறையில் வேலைக்கு செல்லாத நிலையில், குழந்தைகளுக்கு தேவையா உணவுக்கு வழியில்லாமல் பசியால் வாடுவதாக தெரிவித்த ஸ்ரீதேவி, தனது 3 மாத குழந்தைக்கு கூட பால்கொடுக்க தன்னிடம் வசதியில்லை என்று கூறியதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த திருவனந்தபுரம் மேயர் ஸ்ரீகுமார் ஸ்ரீதேவிக்கு உதவ முன்வந்தார். அதைத்தொடர்ந்து, ஸ்ரீதேவியின்  2 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும்  அரசு காப்பகத்தில் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டது. மற்ற 2 குழந்தைகளும் மிகவும் சிறுவயது என்பதால் தாயின் பராமரிப்பு அவசியம் கருதி அவரிடம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஸ்ரீதேவிக்கு மாநகராட்சியில் தற்காலிக வேலைக்கும் ஏற்பாடு செய்தார். மாநகராட்சி குடியிருப்பில் ஸ்ரீதேவி குழந்தைகளுடன் வசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் கூறிய ஸ்ரீதேவி, கணவர்  செலவுக்கு பணம் தராததால் தன்னால் குழந்தைகளின் பசியாற்ற முடியவில்லை என்றும், அரசு உதவி வழங்கியுள்ளது  தனக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஸ்ரீதேவி தற்போது, தனது குழந்தைகள் மண்ணை திங்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து உள்ளார்.

சிறு குழந்தைகள் விளையாடும்போது மண்ணை அள்ளி வாயில் வைப்பது சகஜம், அதுபோலவே மணலை அள்ளி வாயில் வைத்துள்ளது என்றும், அதை யாரோ பார்த்து வீடியோ எடுத்து, குழந்தைகள் விளையாட்டுத்தனமாக மண்ணை அள்ளி வாயில் வைத்ததை தவறான நினைத்து,  குழந்தைகள் மண்ணை சாப்பிடுவதாக வதந்தி பரபப்பி விட்டனர், அதனால், இதுகுறித்து, உரிமை பாதுகாப்பு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கணவர் குடிகாரராக இருந்தாலும்,வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கித்தருவார் என்றும், குழந்தைகள் நல கவுன்சில் அமைப்பினர் வழங்கிய பேப்பரில் தான் படிக்காமல் கையெழுத்து போட்டதாகவும், அதில் குழந்தைகள் பசிக்கொடுமையால் மண்ணை தின்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது பின்னர்தான் தெரிய வந்தது என்று  தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள கேரள குழந்தைகள் நல கவுன்சில் பொதுச் செயலாளர் எஸ்.பி. தீபக், குழந்தைக ள் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறார்கள், பசியைக் கட்டுப்படுத்த மணல் சாப்பிட வேண்டியிருந்தது. கவுன்சிலின் கட்டணமில்லா எண் 1517 இல் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் அவர்களின் நிலை அறியப்பட்டது. தீபக் அவர்களின் இடத்திற்கு வருகை தந்து இதை உறுதிப்படுத்தியதாக கூறினார்.

மேலும், அந்த பெண்ணிடம்  ரேஷன் கார்டு அல்லது ஏழை மக்களின் பிற சலுகைகள் கூட இல்லை என்று அவர் கூறினார்.

அதேவேளையில், அந்த குழந்தைகளின் பாட்டியிடம்  நடத்திய சிவில்சப்ளை அதிகாரிகள், அவரிடம் ரேசன் கார்டு இருந்ததாகவும், அதன்மூலம் அவர்கள் குடும்பத்தினரக்கு  ஒவ்வொரு மாதமும் 35 கிலோகிராம் அரிசியை பெற முடியும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.