சென்னை:

நானும் எனது மகன் ஜெயானந்தும் ஈபிஎஸ் அணியில் இணையவுள்ளதாக வெளியான செய்தி தவறு என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறி உள்ளார்.

ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுகவையும், ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா குடும்பத்தினர் முயற்சி செய்து வந்தனர்.  ஆனால், ஓபிஎஸ் எதிர்ப்பு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டதன் காரணமாக கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற முடியாமல் போனது.

சிறைக்கு போவதற்கு முன்னதாக அதிமுக துணைப் பொதுச்செயலராக அக்காள் மகன் டிடிவி தினகரனை  நியமித்தார். ஆனால், அதிமுக தற்போது கை மாறியதால், அவரது துணைப்பொதுச்செயலாளர் பதவியும் பறி போனது.

இந்நிலையில் மீண்டும் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவோம் என்று சூளுரைத்து அதற்கான தருணத்தை எதிர்நோக்கி உள்ளனர்.

இந்நிலையில், சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி தினகரன், அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை கைக்குள் வைத்துக்கொண்டு ஆட்சியை பிடிக்க  முயற்சி மேற்கொண்டார். அதை செயல்படுத்த முடியாமல் போனது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில்,  சுயேச்சையாக போட்டி யிட்டு வெற்றி பெற்ற  டிடிவி தினரகன் ஜெ. அப்பல்லோவிர் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

சசிகலா சகோதரர் திவாகரன்

ஜெ.சிகிச்சை வீடியோ வெளியானதற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி டிடிவி நடத்தி வருகிறார்.

டிடிவி தினகரனின் இந்த தன்னிச்சையான செயல்பாடுகள் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து, டிடிவி தினகரனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

சமீபத்தில், திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் தனி இயக்கம் தொடங்கி உள்ளார். இந்நிலையில், ஜெய்ஆனந்த் தனது முகநூல் பக்கத்தில், “மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு டிடிவி தரப்பு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவிட்ட நிலையில் மீண்டும் ஒரு பதிவை வெளி யிட்டார். அதில்,  “என்னால் முடிந்த நல்லதை, எனது போஸ் மக்கள் பணியகம் சார்பில் செய்ய இருக்கிறேன்.  அரசியலில் செயல்பட போவதில்லை. யாருக்கும் இடையூறாக இருக்கப்போவதில்லை. என்னை சீண்டி அரசியலில் இழுத்துவிட்டால்தான் உண்டு” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் மற்றொரு பதிவில் “நான் அ.ம.மு.க. என்று எங்கும் குறிப்பிடவில்லை. குறிப்பிடாமலே நான் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும் என ஏன் ஒரு சில நிர்வாகிகள் நினைக்கிறார்கள்?. எப்போது பிரச்சினை வரும் என ஒரு சிலர் நம் கூட்டத்திலேயே காத்திருப்பதாக ஒரு சிலர் வாயிலாக அறிந்தேன். நம் தலைமை இதனை கண்டறியும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

திவாகரன் மகன் ஜெய்ஆனந்த்

இதற்கு பதில் அளித்து டிடிவி தினகரன் சார்பாக அவரது தீவிர விசுவாசியான வெற்றிவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டி ருந்தார். அதில், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் வழி காட்டுதலில் தாங்கள் இயங்குவதாகவும், திவாகரன் குழப்பங் களை உருவாக்கி வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு மறைந்த மகாதேவனின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர் களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்தரமாக எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்கு தெரியும், எடப்பாடி பழனிசாமி யோடு தொடர்பு வைத்துக் கொண்டு சசிகலாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திவாகரன் செயல்படுவது, உண்மைக்கு புறம்பானது. அவர்கள் ஈபிஎஸ் அணியில் இணைய முயற்சி செய்து வருகிற்னர்.  இதனை முதலில் சசிகலா ஏற்றுக்கொள்வாரா?. தங்களின் சுய லாபத்திற்காக கட்சியையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடா வாக முனையாதீர்கள். நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களை குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள் என்று காட்டமாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய  திவாகரன், நானும் எனது மகன் ஜெயானந்தும் ஈபிஎஸ் அணியில் இணையவுள்ளதாக வெளியான செய்தி தவறு என்று  கூறி மறுத்துள்ளார்.

சசிகலா குடும்பத்தில் நிலவி வரும் மோதல் காரணமாக தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. டிடிவிக்கு எதிராக திவாகரன் களத்தில் இறக்க ஆயத்தமாகி வருவதாகவும், அதன் முன்னோட்டமாகவே அவரது மகனின் பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.