அதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது: பாமகவுக்கு 7 தொகுதிகள்

சென்னை:

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பாஜக கூட்டணியில் பாமகவும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. அதிமுக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் மும்முரமாக பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், அதிமுக பாஜக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் பாமக சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கூட்டணி இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் அதிமுக-பாமக இடையே கையெழுத்தானது.

இன்று சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பாமக அதிமுக இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர். அவர்கள் அதிமுக ஒருங்கிணைப் பாளர்களான  முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை அதிகாரப்பூர்வ மாக நடைபெற்றது.

இதில் இரு கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டதை தொடர்ந்து பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு பாராளுமன்ற  ராஜ்யசபா  (மாநிலங்களவை) தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்து இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி பாமகவுக்கு தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் உள்பட 7 தொகுதிகள்  பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற  தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு  அளிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் பாமகவினர் திமுக கூட்டணியில் சேருவதற்காகவும் மற்றொரு புறம் திரைமறைவு பேச்சு வார்த்தை நடத்தியது. எங்கு அதிக தொகுதிகள் கிடைக்கிறதோ அங்கு சேர முடிவு செய்த பாமக இரு தரப்பினரிடையேயும் பேசி வந்தது. இதன் காரணமாகத்தான் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறும் என தகவல்கள் பரவியது.

ஆனால்,  திமுக கூட்டணியில் பாமகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என கறாராக கூறப்பட்ட நிலையில், அதிமுக 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்பட ஒரு மாநிலங்களவை தொகுதி என மொத்தம் 8 தொகுதிகள்  தருவதாக  கூறியதால்,   பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து ஒப்பந்தம் போடப்பட்டது… குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.