ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இதில், ஜேஎம்எம் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, ஜேஎம்எம் கட்சித்தலைவர் ஹேமந்த் சோரன் மாநில முதல்வராக பதவி ஏற்பார் என தெரிகிறது.

இதன் காரணமாக ஜார்கண்டில் பாஜக ஆட்சி விரட்டியடிக்கப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு அம்மாநில மக்கள் முழுக்கு போட்டுள்ளனர்.

81 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக தேரதல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சுமார் 66 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில், பாஜக தனது முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் ரகுபர் தாஸையே முன்னிறுத்தி 81 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. கடந்த தேர்தலில் அதன் கூட்டணி கட்சியாக இருந்த அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் தனித்தனியாக களமிறங்கின.

அதேவேளையில்,  எதிர்க்கட்சிகளான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன.  காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.  தொடக்கம் முதலே, பாஜக, காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி இருந்து வந்தது. இரு கட்சிகளும் சமநிலையிலேய நீடித்து வந்த நிலையில், காலை 11 மணி நிலவரப்பட்டி, காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கத் தொடங்கியது.

மதியத்திற்கு பிறகும் தொடர்ந்து காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி  ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான 41 இடங்களையும் தாண்டி 47 இடங்களில முன்னிலை வகித்து வருகிறது.

மாலை 4 மணி நிலவரப்படி,

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 28 இடங்களிலும், காங்கிரஸ்  கட்சி 14 இடங்களிலும், ஆர்.ஜே.டி 4 இடங்களிலும் வெற்றி பெறும் தருவாயில் உள்ளது.இந்த  கூட்டணி 46 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

அதுபோல பாஜக 24 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மாநில மக்கள் பாஜகவுக்கு செமத்தையாக அடி கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில்,  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. இதனால் ஜேஎம்எம் தலைமையில் கூட்டணி ஆட்சி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

ஜேஎம்எம்  வெற்றியைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் இன்றே ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹேமத் சோரன் முன்னாள் முதல்வர் சிபுசோரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.