மானா மதுரை அருகே இரு பிரிவினரிடையே பயங்கர கலவரம்: 2 பேர் கொலை, 10க்கும் மேற்பட்டோர் காயம்

 

மோதலில் அரிவாளால் வெட்டுபட்டு காயமடைந்தவர்கள்

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு பிரிவினர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் கலவமாக மாறியது. இதில் 2 பேர் வெட்டி கொல்லப்பட்டனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு, கச்சநத்தம் கிராமங்கள். இந்த கிராமத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு  கிராமங்களில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்து, அமைதியானது.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஓரு கும்பலாக பயங்கர ஆயுதங்களுடன் சென்று கச்சநத்தம் கிராம  மக்கள்  தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர்கள்  மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இத்தாக்குதலில்10-க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கலவரத்தை அடக்கினர்.

கலவரத்தின்போது காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்ளில்  ஆறுமுகம்,  மருது என்ற சண்முகநாதன் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலன் அளிக்காமல்உயிரிழந்தனர். மற்றவர்கள்  உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாக கச்சநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.