டெல்லி:

‘அரசியலமைப்பை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று‘ என்று மத்தியஅரசை வலியுறுத்தி,  நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் கட்சி கொடி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் உள்பட மத்தியஅரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையிலும், காங்கிரஸ் கட்சியின் 135வது ஆண்டு நிறுவன நாளையொட்டியும், இந்த கொடி அணிவகுப்பு நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வேணு கோபால் தெரிவித்து உள்ளார். கவுகாத்தியில் நடைபெறும் கொடி அணிவகுப்பு பேரணியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கலந்துகொள்கிறார்.

பாஜக அரசு சமீபகாலமாக கொண்டு வந்துள்ள சட்டத்திருத்தங்கள் மக்களிடையே மதநல்லிணக்கத்தை வேரறுத்து வருகின்றன. என்ஆர்சி, குடியுரிமை திருத்த சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற விவகாரங்களுக்கு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் உள்பட  பல அரசியல் கட்சிகளும், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களை  வருகின்றன.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் கட்சியின் 135வது ஆண்டு நிறுவன நாளில்,  மத்தியஅரசின் நடவடிக்கைகளை கண்டித்தும்,  குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், ‘அரசியலமைப்பை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று’   என்ற ஸ்லோகத்துடன் நாடு முழுவதும் பிரமாண்ட கொடி அணிவகுப்பை நடத்துவதாக அறிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில், ‘அரசியலமைப்பை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று’  என்ற கோஷத்துடன் நாடு முழுவதும்  நாளை (28-12-2019) கொடி அணிவகுப்பு நடத்தும் என்று தெரிவித்து உள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவுஹாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும், ஒவ்வொரு மாநிலத்திலும்,  அந்தந்த மாநிலங்களில் உள்ள  மூத்த தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் கூறி உள்ளார்.

நாளை காலை 9.30 மணி டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் கட்சியின் 135வது ஆண்டு நிறுவன நாள்  கட்சிக் கொடியை ஏற்றி, கொடி அணிவகுப்பை தொடங்கி வைப்பதாகவும், அதைத்தொடர்ந்து  அந்தந்த மாநில தலைநகரங்களில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் கொடி ஏற்றி,  “அரசியலமைப்பை காப்பாற்றுங்கள்-இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற ஸ்லோகத்துடன், கொடி அணிவகுப்பை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, மாநில தலைவர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாகவும், கொடி அணிவகுப்பு முடிவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், மாநிலத் தலைவர்கள், அரசியலமைப்பின் முன்னுரையைப் படிப்பார்கள் என்றும்  வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.