நாட்டின் மிகப்பெரிய சொத்து எல்.ஐ.சி: நிதியமைச்சர் ஜெட்லி புகழாரம்!

--

புதுடெல்லி:

எல்.ஐ.சி நிறுவனத்தில் வைரவிழா கொண்டாட்டங்கள் நாடெங்கும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் எல்.ஐ.சியின் பங்கு அளப்பரியது என்று அந்த நிறுவனத்தின் வைரவிழா நிகழ்வில் பங்கேற்றுப்பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

2-lic

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: எல்.ஐ.சி நாடெங்கும் கிளைகளை பரப்பி ரூ.22.20 லட்சம் கோடி சொத்துக்களுடன் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்தை கொண்டுள்ள நிறுவனம் ஆகும். கடந்த நிதியாண்டில் 40,000 கோடி லாபத்தை அள்ளியதுடன் தனியார் நிறுவனங்களின் கடுமையான போட்டிகளின் மத்தியிலும் கடந்த 16 ஆண்டு காலமாக காப்பீட்டுத் துறையில் முன்னேற்றப்பாதையில் தொடர்ந்து நடைபோடும் நிறுவனமாகும்.

1956ல் இந்நிறுவனம் தொடங்கியது முதல் நாட்டின் வளர்ச்சியிலும் இதன் பங்களிப்பு அளப்பரியது. பொருளாதாரத்தில் மிகவும் முதன்மையான துறைகளில்  பல லட்சம் கோடிகளை முதலீடு செய்யும் நிறுவனமாக இது வளர்ந்துள்ளது.

எல்.ஐ.சி தனியாருக்கு தாரை வார்க்கப்படாமல் அரசின் கையில் இருந்தாலும் பலமிக்க ஒரு நிறுவனமாக பிரிட்டன், ஓமன், பஹ்ரைன், சவுதி அரேபியா, கென்யா உள்ளிட்ட 11 நாடுகளில் தனக்கு அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

இவ்வாறு எல்.ஐ.சியின் வெற்றிச் செய்திகளை பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்ட அமைச்சர், அந்நிறுவனத்தை தனியார் மயமாக்குவது குறித்த அரசின் நிலைப்பாடு குறித்து எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.