அதிகாலை 2.30 மணிஅளவில் பலத்த காற்றுடன் கரையை கடந்தது ‘கஜா’

நாகை:

மிழக மக்களை கடந்த சில நாட்களாக மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் நாகப்பட்டினம் வேதாரண்யம் இடையே கரையை கடந்துள்ளது.

நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் புயலின் தாக்கம் தொடங்கிய நிலையில், அதிகாலை 2.30 மணி அளவில் முழுமையாக  கஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் எப்போது கடக்கும் என பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இருந்த நிலையில், புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. ஆனால், வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் கஜா புயலின் கண்பகுதியில் முதல் பகுதி கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் 100 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் வீசியது.

இந்த காற்றின் காரணமாக  நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும், பல இடங்களில் மின் கம்பங்களும் சேதமடைந்து இருப்பதாக  தகவல் வெளியாகி உள்ளது.

வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் ஏராள வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்ததாக கூறப்படுகிறது. அதுபோல  காரைக்கால் பகுதியில்  மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது. இதனால் 6 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலைதொடர்பும் பாதிக்கப்பட்டது.

கஜாவின் ஏற்பட்ட பாதிப்பு விவரம் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்றாலும், பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் இரவோடு இரவாக மீட்பு பணிகள் தொடங்கப் பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் முறிந்த மரங்களை அகற்றும் பணிகள் துவங்கின.

ஆனால், புயலின் மையப் பகுதியான கண் பகுதி  கரையை கடந்துவிட்டாலும்,  புயல் முழுவதுமாக கரையை கடக்க மேலும் இரண்டு மணி நேரம் ஆகும் என்றும்,  பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார்கள்.  விரைவில் காற்று மழையின் அளவு குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

புயல் காரணமாக பல இடங்களில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களுக்கு தேவையான உணவு, அடைக்கலம், மருத்துவ வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்பட்டன.