சென்னை:

காவிரி மேலாண்மை விவகாரத்தில், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்ன காங்கிரசை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், அதிமுக எம்.பி.க்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதம் மோதலாக மாறியதால் பரபரப்பு நிலவியது.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து 16 நாட்களாக பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பாராளுமன்றம் எந்தவித விவாதமும் இன்றி முடங்கி உள்ளது.

இதற்கிடையில், மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பாராளுமன்ற செயலரிடம் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவாதம் நடைபெற முடியாத நிலையில், அதிமுக எம்.பி.க்களின் அமளி காரணமாக பாராளுமன்றம் முடங்கி வருகிறது.

இந்நிலையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபால் குற்றம்சாட்டினார். இதற்கு அதிமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அமளி ஏற்பட்டது.

இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசியதால் அவையில் அமளி அதிகமாகி மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அரசுக்கும் அதிமுக வுக்கும் இடையே மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக குற்றம் சாட்டினார். இதற்கு அதிமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கடும் அமளி ஏற்பட்டது.