பெங்களூரு முழுவதும் கண்காணிப்பு காமிரா பொருத்த முடிவு: குமாரசாமி

பெங்களூரு:

பெங்களூரு நகர்  முழுவதும் கண்காணிப்பு காமிராக்கள்  பொருத்த மாநில அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.

செய்தியாளர்களின் சந்திப்பின்போது பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி,  மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்று 5 மாதங்கள் ஆகிறது. கடந்த 5 மாதங்களாக நான் முதல்வராக இருந்து பல்வேறு பணிகளை நிறைவேற்றி உள்ளேன் என்று கூறினார்.

பட்ஜெட்டில் அறிகிக்கப்பட்ட 460 திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், தேர்தலுக்கு முன்பு அறிவித்தபடி, ஆட்சிக்கு வந்தவுடன் 24 மணி நேரத்திற்குள் விவசாய கடன் தள்ளுபடி செய்தோம் என்றவர், ஆனால், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய  தேசிய வங்கிகள் ஒத்துழைக்க மறுக்கின்றன என்று கூறினார்.

இதிலும் அரசியல் இருப்பதாக தெரிவித்த முதல்வர், அதுபற்றி நான் கவலைப்படவில்லை. கடன் தள்ளுபடி திட்டத்தால் 44 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் என்றார்.  கல்வி கடனை தள்ளுபடி செய்வது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.6,500 கோடி செலவில் வெளி வட்டச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் டெண்டர் விடப்படும். இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். 3 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவடையும்.

மேலும், பெங்களூரில் நீண்ட காலமாக இருந்து வரும் குப்பை  பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.  சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போலீஸ் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்.

ரூ.2 ஆயிரம் கோடி செலவில் பெங்களூரு மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

வீடுகளை இழந்த மக்களுக்கு தலா ரூ.10 லட்சம் செலவில் ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது.  எனது தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது கடவுள் கொடுத்த அதிகாரம். கர்நாடகத்தை காப்பாற்றவே நாங்கள் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம்.

இடைத்தேர்தல் நடை பெறும் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இந்த வெற்றி, அடுத்து நடைபெற உள்ள 3 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சபரிமலை விவகாரத்தில் நான் எந்த கருத்தும் கூற முடியாது. கர்நாடகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு கர்நாடக அரசால் பாதுகாப்பு வழங்க இயலாது. இது கேரளா மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். அடுத்த மாநில விவகாரங்களில் தலையிட முடியாது.

‘மீ டூ‘ இயக்கம் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.