ரு காலத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமலும், சமூகத்தில் மிகவும் அந்தஸ்தான குடியிருப்பு பகுதிகளாகவும் விளங்கிய பகுதி சென்னை பழைய மகாபலிபுரம் ரோடு எனப்படும் ஓஎம்ஆர் ஏரியா.. இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. பெரும்பாலும் ஐடி ஊழியர்களின் ஆதிக்கத்தில் இருந்த இப்பகுதி அபார்ட்மென்ட்கள் கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களாக இது உச்சத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள்.

“யாரும் எதிர்பாராத விதமாக சம்பளத்தில கை வெச்சுட்டாங்க கம்பெனில. அதனால இந்த சம்பளத்தில இவ்ளோ வாடகை குடுத்து கட்டுபடி ஆகாது. இந்த காரணத்தைச் சொல்லி வாடகையை குறைச்சுக்க சொன்னாலும் ஹவுஸ் ஓனர் ஒத்துக்கல. அதான் வேற ஏரியா போயிட்டோம்” என்கின்றனர் சில ஐடி ஊழியர்கள்.

அதிலும் பலர் தங்களின் வீட்டு உபயோக பொருட்களைக்கூட அங்கேயே விட்டுச்சென்று விட்டனர். இவைகளை காலி செய்தாலொழிய மற்றவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட முடியாது என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் வீட்டு உரிமையாளர்கள். ஒரு சிலர் வீட்டை வேறு யாருக்கும் வாடகைக்கு விட வேண்டாம். நானே இன்னும் இரண்டு மூன்று மாதத்திற்குள் திரும்ப வந்து விடுவேன் என்று கூறிவிட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர் இவர்கள்.

பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் 25% வரை பிடித்தம் செய்துள்ளது. ஒரு சில நிறுவனங்கள் “லே ஆஃப்” அறிவித்துவிட்டன. இதன் தாக்கம் தான் இவ்வாறு வெளிப்படுகிறது. இது ஓஎம்ஆர் ஏரியாவில் மட்டுமல்ல, நகரம் முழுவதும் எதிரொலிக்கிறது. கிருஷ்ணமாச்சாரி, ஐடி ஊழியர், தனது உடன் பணியாளருடன் மேற்கு மாம்பலத்தில் இரண்டு படுக்கையறை அபார்ட்மென்ட்டில் தங்கியிருந்தவர், தற்போது ஜாபர்கான்பேட்டையில் ஒரு படுக்கையறை வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இவரைப்போலவே பலரும் சிறிய வீடுகளையும், பேச்சிலர் அறைகளையும் தேடி பிடித்து மாறி வருகின்றனர்.

கொரோனாவின் தாக்கம் எங்கெங்கெல்லாமோ எதிரொலிக்கிறது.

– லெட்சுமி பிரியா