பேனர்கள் விவகாரம்: சட்டதிருத்தம் கொண்டு வர உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை:

ட்ட விரோத டிஜிட்டல் பேனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால், அதை மதிக்காமல் ஆளும் கட்சியினர் உள்பட அனைத்து தரப்பினரும் சாலை ஓரங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களை வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வேதனை தெரிவித்திருந்த நிலையில், டிஜிட்டல் பேனர்கள் வைப்பதை ஒழுங்குபடுத்த சென்னை மாநகராட்சி சட்டத்தில் 6 மாதங்களுக்குள் திருத்தம் கொண்டுவரவும்,  டிஜிட்டல் பேனர்கள்களை ஒழுங்குபடுத்த, தண்டனை வழங்க ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்  என்றும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.

இது தொடர்பாக டிராஃபிக் ராமசாமியின் தாக்கல் செய்த மனுவில்,  பொதுமக்களுக்கு இடையூறாக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. டிஜிட்டல் பேனர் தொடர்பான விதிகளை கடுமையாக பின்பற்றவும், கடுமையான புதிய விதிகளை உருவாக்கவும், அரசுக்கு உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.