“ஏக எதிர்ப்பார்ப்போடு வெளியான அந்த படத்து தயாரிப்பாளர் இப்போது செலவழித்த பணம் வந்துசேருமா என்று மெர்ஸலாகி கதறும் நிலைக்கு வந்துவிட்டார் பாவம்” என்று பரிதாபப்படுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.

“பிரம்மாண்டமான விளம்பரம், பிரம்மாண்டமான வியாபாரம்… அப்புறம் என்ன பிரச்சனை ” என்று விசாரித்தோம்.

கிடைத்த தகவல்கள் அதிரவைத்தன:

“அந்த பட நிறுவனத்தினர் ஹீரோக்களையே… ஏன், மனிதர்களையே நம்பாமல் விலங்குகளை வைத்து எடுத்தே பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்கள். அந்நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமானவர் இருந்தவரை இந்த நிலைதான். குறைந்த பட்ஜெட், அளவான வருமானம். இதில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் அனைவருக்கும் நிறைவான வருமானம். அதோடு ரசிகர்களுக்கு மகிழ்வான  திரைப்படம். இப்படித்தான் இருந்தார் அந்த நிறுவனர்.

அருக்குப் பிறகு, பெரிய நடிகரை வைத்து இயக்க வேண்டும் என்று ஆர்வப்பட்டது நிறுவனம். அப்படித்தான் சமீபத்தில் வெளியான பெரும் நடிகரின் படத்தை தயாரிக்க ஆரம்பித்தது.

“நிறுவனத்தை உருவாக்கியவர் ஆட்டையும் மாட்டையும் நம்பியே வெற்றி பெற்றார். நாங்களோ மனிதர்களை நம்பி மோசம்போய்விட்டோம்” என்று கதறுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இதற்குக் காரணம் இருக்கிறது.

நடிகருக்கு நாற்பது கோடி ரூபாய் சம்பளம், இயக்குநருக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் 48 கோடியில் இதரர்கள் சம்பளம் மற்றும் படச் செலவு” என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு செலவு எகிறிக்கொண்டே போனது. “படத்தின் இயக்குநர் தேவையில்லாத செலவுகளை வைக்கிறார்” என்று தயாரிப்பு தரப்பு புலம்பியது. ஆனால் வெளியில் சொல்ல முடியாத நிலை.

4 கோடி செலவில் லண்டனில் கார் சேசிங் காட்சி எடுக்கப்பட்டது. அதை இறுதியில் (எடிட்டிங்கில்) கட் செய்துவிட்டார் இயக்குநர்.

இப்படி சரிவர திட்டமிடாததால் படச் செலவு எகிறியது. இன்னொரு பக்கம் டைனோசர் குட்டிகளாய் வளரும் வட்டி. திண்டாடிப்போனார் தயாரிப்பாளர். இறுதியில் 150 கோடி ரூபாய் செலவில் படம் முடிந்தது. அதாவது திட்டமிட்டதைப்போல அரைப்பங்கு அதிகமான செலவு.

ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்தது. வெளிநாட்டு உரிமை, வெளி மாநில உரிமை, சாட்டிலைட் உரிமை என்று 60 கோடி ரூபாய்க்கு படத்தை விற்றார் தயாரிப்பாளர். தமிழகத்தில் சொந்தமாக ரிலீஸ் செய்வது என்று முடிவெடுத்தார்.

படத்தை திரையிடும் கியூப் நிறுவனத்துக்கு செலுத்த தயாரிப்பாளரிடம் பணம் இல்லை. மீண்டும் கடன் வாங்கி ஒருநாளுக்கு மட்டும் பணம் கட்டினார்.

இந்த நிலையில் படத்தின் வியாபாரம், தான் நினைத்த அளவு இல்லை என்பதை உணர்ந்த நாயகர், தனது சம்பளமான நாற்பது கோடியில் ஐந்து கோடியை திருப்பித் தந்தார்.  அதை வைத்தே அடுத்தடுத்த நாட்களுகக்கு கியூப் நிறுவனத்துக்கு பணத்தைக் கட்டினார் தயாரிப்பாளர்.

இதற்கிடையே தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று வனவிலங்கு வாரியம் புகார் தெரிவிக்க.. அறிவித்தபடி தீபாவளுக்கு படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதற்கிடையேதான் மாநிலத்தின் ஆளும் தரப்பின் முக்கியஸ்தரை சந்தித்தார் பட நாயகன்.

ஒருவழியாக படத்துக்கு சான்றிதழ் கிடைத்து ரிலீஸும் ஆனது. ஆனால் அதே நாள் இணையத்திலும் படம் ரீலீஸ் ஆனது.

இதனால் தயாரிப்பு தரப்பு துவண்டு போனது.

இதற்கிடையேதான், படத்தின் வசனங்கள் சில மத்திய அரசின் சில நடவடிக்கைகளை விமர்சிப்பதாக இருக்கிறது என்று அக் கட்சியினர் புகார் தெரிவித்தனர். அக்காட்சிகளை நீக்கியே ஆக வேண்டும் என்று மிரட்டினர். இதையடுத்து அக்காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர்.

ஆனால், “மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்திருக்கும் காட்சிகளை மக்கள் ஆரவாரத்துடன் ரசிக்கிறார்கள். அக்காட்சிகளை நீக்கினால் மக்கள் ரசிப்பார்களா” என்ற பயம் தயாரிப்பு தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது.

மேலும், நீக்கப்படாத காட்சிகள் இருக்கும் இணைய வெளியீட்டையே மக்கள் ரசிப்பார்களோ என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 60 கோடி ரூபாய் வசூல் ஆனால்தான், போட்ட காசாவது வந்ததே என்று பெருமூச்சுவிட முடியும்.

ஆனால் போகிற போக்கைப்பார்த்தால் அப்படி நடக்கும் என்று தோன்றவில்லை.

இதனால்தான் தயாரிப்பு தரப்பு கதறிக்கொண்டிருக்கிறது.. பாவம்” –

–    ஹூம்…  படத்தைப் பார்த்து ஆஹா ஓஹோன்னு புகழறோம், இல்லேன்னா செமையா கலாய்க்கிறோம்.. ஆனா படத்துக்குப்பின்னால இவ்வளவு விசயம் இருக்கு பாருங்க!