திருப்பூரில் 1,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 1,346 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியே சுற்றிய 793 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் சந்தைகளில் அதிகம் கூட்டம் கூடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் ஒருபகுதியாக காய்கறிகள் அடங்கிய தொகுப்பை குறைந்த விலையில் வீடுகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலைய தற்காலிக சந்தையில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருப்பூரில் வீட்டு கண்காணிப்பில் 1346 பேர் உள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” என்றார்.