அசங்கட்:

சாதி மதங்களின் பெயரால் மக்களிடையே பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.

உ.பி. மாநிலம் அசங்கட்டில் 552 கோடி அளவிலான மக்கள் நலத்திட்ட துவக்க விழாவில்  யோகி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, “இங்கு சாதிய இன பயங்கர வாதம் பரவியிருந்தது. இதற்கு முன்னர் ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் திறமையற்ற தன்மையே இத்தகைய விசம் மக்களிடையே பரவ காரணமாக இருந்தது. கடந்த ஒன்பது மாதங்களாக நம்முடைய அரசு இதுபோன்ற அநியாயங்களைக் களையவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் பலனளிக்கும் வகையில் திட்டங்களை மேற்கொள்ள அரசு முயல்கிறது.

இனி சாதி இன வேறுபாடுமிக்க மாநிலமல்ல உத்திர பிரதேசம். புரட்சியின் மற்றும் மாற்றத்தின் மூலம் அசங்கட்டின் பெயரை உலகம் தெரிந்து கொள்ளும். கடந்த அரசின் திறமையற்ற ஆட்சியால் ஏராளமான நலத்திட்டங்களுக்கான நிதிகள் பாழாகிப் போயுள்ளன. அவற்றின் ஊழலுக்கும் குற்றங்களுக்கும் காரணமானவர்கள் சிறைக்குச் செல்வார்கள்.

இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். உத்திர பிரதேசத்திலுள்ள அனைத்து ஏழைகளுக்கும் 2022 க்குள் சொந்தமாக வீடுகள் அமைத்து கொடுக்கப்படும்” என்று யோகி பேசினார்.