சென்னை: திமுக தலைமையில் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ கு.க.செல்வம், திமுக இப்போது ஒரு குடும்பத்தின் கட்சியாக செயல்படுகிறது, எனக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம் என்று குற்றம் சாட்டினார்.

திமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக, பாஜகவில் இணைய ஆர்வம் காட்டி வரும், ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம், நேற்று திடீரென மாநில பாஜக தலைவர் முருகனுடன் டெல்லி பயணமானார். அங்கு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசிய நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், தான் பாஜகவில் சேரவில்லை, தொகுதி சம்பந்தமாகவே பேச வந்தேன் என்று கூறினார்.

இதையடுத்து, கு.க.செல்வத்தை கட்சியில் இருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்ததுடன், அவரது பதவியும் பறிக்கப்பட்டதாக திமுக தலைமை இன்று காலை அறிவித்தது.

இந்த நிலையில்,  இன்று காலை  டெல்லியில் இருந்து சென்னை  திரும்பிய  கு.க.செல்வம், பின்னர் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பாஜக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

ராமர்கோவில் அடிக்கல் நாட்டும் விழாவையொட்டி, தமிழக பாரதிய ஜனதா அலுவலகமான கமலாயலத்தில் ராமர் படத்திற்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது. இதில் தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் கமலாலய ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கு.க.செல்வம்   ராமர் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று தற்காலிமாக கட்சியில் இரந்து  நீக்கப்பட்டுள்ளேன். என்னை கட்சியை விட்டு  நீக்கினாலும் பரவாயில்லை. தமிழகத்தில் வாரிசு அரசியல் மாறி குடும்ப அரசியல் நடக்கிறது. ‘திமுக இப்போது ஒரு குடும்பத்தின் கட்சியாக செயல்படுகிறது’! திமுகவில் 55வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்சியில் இருக்காதீர்கள். எனக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படலாம் . அதனால் எல்லோரும் பாஜகவில் வந்து சேருங்கள் என்று  கூறினார்.

மேலும் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தவர்.  நான் கடவுள் பக்தி கொண்டவன் என்ற அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப தற்போது  ராமர் கோவில் கட்டுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவே பாரதிய ஜனதா தலைவர்களை சந்தித்தேன். அதன்பின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தேன்.

பாஜக தலைவர்களை சந்திக்கிறீர்களே  திமுகவில் இருந்து நீக்க மாட்டார்களா? என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். தைரியமிருந்தால் நீக்கிக் கொள்ளுங்கள் என பதில் அளித்திருந்தேன். அதன்படி தற்போது தற்காலிகமாக நீக்கியிருப்பதாக தெரிவித்து உள்ளார்கள்.

திமுக கொடுத்த அறிக்கையை இதுவரை நான் பார்க்கவில்லை. அதை   பொறுமையாக படித்து பார்த்துவிட்டு திமுக-விற்கு நிச்சயம் விளக்கம் தருவேன்.

கட்சி தாவல் தடை சட்டத்தால் பதவி பறிபோய்விடும் என்பதால் திமுகவில் இருந்து விலகவில்லையா? என்ற கேள்விக்கு, எம்எல்ஏ பதவி போனாலும் பரவாயில்லை. நான் ஏற்கனவே 10 நாட்களுக்கு முன்பாக ஆர் எஸ் பாரதி அவர்களிடம் தலைமை நிலைய செயலாளர் பதவியும் வேண்டாம்,  செயற்குழு பதவியும் வேண்டாம். உங்களுக்கு உபயோகப்படும் என்றால் எம்.எல்.ஏவாக பதவியை வகிக்கிறேன், இல்லையென்றால் விலகுகிறேன் என ஏற்கனவே கூறிவிட்டேன்.

நீங்கள் பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, பாஜக தலைவர் முருகன் அவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு பின்னர் அதுகுறித்து தெரிவிப்பதாக கு.க.செல்வம் கூறினார்
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் என்னிடம் பேசினார், அப்புாது மாவட்ட செயலாளராக ஒருவரை நியமிப்பதாக மட்டும் கூறினார்.