கட்அவுட் கலாச்சாரத்தால் கலைந்துபோன இளம்பெண்ணின் கனவு! யார் பொறுப்பு?

மிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே கட்அவுட் கலாச்சாரத்தை தவிர்க்க மறுத்து வருவதற்கு,  சுபஸ்ரீ போன்றவர்களின் மரணமே எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

ஒருகாலத்தில், சினிமா நடிகர்களுக்குத்தான்  பேனர்கள், ஆள்உயர கட்அவுட்கள் வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. அதுவும் வருடத்திக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ, அவர்களின் படம் வெளியாகும் சினிமா தியேட்டர்களுக்குள் மட்டுமே அமைக்கப்படும்.

ஆனால், என்றைக்கு தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்கியதோ, அன்று முதலே தமிழகத்தில், விளம்பர பதாதைகளும்,  கட்அவுட் கலாச்சாரமும்  அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த கலாச்சாரம் இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தற்கு ஏற்றவாறு, டிஜிட்டல் பேனர்களாகவும், ஃபிளெக்ஸ்களாகவும் , சாலையோரங்கள் மட்டுமல்லாது சாலையின் நடுவிலேயும், பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் இடங்களிலும் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் நடப்பதற்கே வழியின்றி சாலையின் நடுவே நடக்கும் அவஸ்தையை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த பேனர் கலாச்சாரத்தால், சென்னை வாழ் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவது அனைவரும் அறிந்தே. எந்தவொரு அரசியல் கட்சி கட்சி நிகழ்ச்சியானாலும் அந்த பகுதி முழு வதும் பேனர்கள் வைக்கப்படுவதும், அடுத்தவர் வீட்டு முன்பு, வீட்டு உரிமையாளரின் அனு மதியின்றி பேனர் வைப்பது, வீட்டு உரிமையாளர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு பேனர்களை வைத்து அவர்களது வீட்டு வாசல் மறைக்கப்படுவது போன்ற நிகழ்வுகளும், இதன் காரணமாக அடிக்கடி ஏற்படும் தகராறுகளும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளன.

இதுகுறித்து காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும், அரசி யல் கட்சிகள் கொடுக்கும் கையூட்டைப் பெற்றுக்கொண்டு அமைதியாகவே சென்று விடுகி றார்கள். ஒருசிலர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால், புகார் அளித்தவரையே, பேனர் வைத்த கட்சிகளிடம் காட்டிக்கொடுத்து, மேலும் பிரச்சினையை உருவாக்கி விடுகிறார்கள்… இதுபோன்ற செயல்களால் தான் பொதுமக்கள் மக்கள் நலப் பிரச்சினை குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், அடங்க மறுக்கின்றனர் அரசியல் கட்சியினர்.

இந்த நிலையில்தான், நேற்று ஓஎம்ஆர் சாலையின் நடுவே அதிமுகவினர் வைத்திருந்த பேனர், காற்றின் வேகத்தில், அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளம்பெண் ணின் மீது விழா, இதன் காரணமாக நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த இளம்பெண்ணின் மீது பின்னால் வந்த லாரி மோதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார் சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண்.

இந்த பெண்ணை பெற்றோர், தனது மகள் குறித்து எவ்வளவோ கனவு கண்டிருப்பார்கள்… அவளை வெளிநாட்டுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்க ஆசைப்பட்ட அவரது பெற்றோரின் கனவில் இன்று மண் விழுந்துள்ளது. ஆசையாக வளர்த்த ஒரே ஒரு பெண்ணையும் காலனுக்கு பறி கொடுத்து விட்டு இன்று யாருக்காக இனிமேல் வாழ வேண்டும் என்று புலம்பிக்கொண்டிருக் கிறார்கள்.

சென்னை  குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. பி.டெக் படிப்பை முடித்துள்ளவர், மேல்படிப்புக்காக கனடா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான  நேர்காணலை முடித்துவிட்டு வரும்போதுதான், இந்த விபத்தில் சிக்கி மாண்டு போயுள்ளார்.

இந்த விபத்து காரணமாக  லாரியை ஓட்டிவந்த மனோஜ் என்ற ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார், டிஜிட்டர் பேனர் வைத்த கட்சிக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், பேனரை பிரிண்ட் செய்த அச்சகத்தை சீல் வைத்துள்ளதாகவும் அரசு அறிவித்து உள்ளது. அவ்வளவுதான்… அரசின் செயல்பாடு முடிந்துவிட்டது.

ஆனால், அரசியல் கட்சிகளின்  கட்அவுட் கலாச்சாரத்தால் கலைந்துபோன அந்த இளம்பெண்ணின் கனடா கனவுக்கு யார் பொறுப்பேற்பது…. ?

ஒரேஒரு மகளை 23 வருடம் ஆசையாக  வளர்த்துவிட்டு, இன்று அகால மரணத்தில் பறிகொடுத்து விட்டு தவிக்கும் அவரது பெற்றோரின் இந்த நிலைக்கு யார் பொறுப்பு?

சமீபத்தில்தான் சென்னை மாநகராட்சி,  அனுமதியின்றி பேனர் வைத்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, ஆறு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும், பேனர் பிரிண்ட் செய்யப்படும் அச்சகம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட வேண்டும் அறிவிக்கப்பட்டி ருந்தது.

ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்திற்குள் சுபஸ்ரீ பலியாகி உள்ளார். சுபஸ்ரீயின் அகால மரணம், சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சிக்கப்பட்டு வருகின்றன. நெட்டிசன்கள் பலர் கடுமையான வார்த்தைகளால் அரசை விமர்சித்து வருகின்றனர்.

ஏராளமானோர் ரூபஸ்ரீயின் மரணத்துக்கு சென்னை மாநகராட்சி பொறுப்பேற்க வேண்டும்? அல்லது தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்? என்றும்,

இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றம், விதியை மீறி பேனர்கள் வைத்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத் தனத்தாலும்,  அரசியல் கட்சியினரின் அதீத விளம்பர போதை காரணமாகவே இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சியினிரின் விளம்பர போதைக்கு  சுபஸ்ரீயே கடைசி பலியாக இருக்கட்டும்…

இனியும் இதுபோன்று அத்துமீறி வைக்கப்படும் பேனர்கள், பிளக்ஸ்கள் வைக்காதவாறு பொதுமக்கள் ஒவ்வொருவரும்,  கண்காணிக்கவும், அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு தடுத்து நிறுத்தவும் பொதுமக்களாகிய நாமும் முன் வரவேண்டும்… அது  நமது கடமையும்கூட….