ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பொருளாதார பாதிப்பு: பொன் ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்:

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த மத்திய பாஜ அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். இது தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மக்கள் தொடர் போராட்டம் காரணமாக தமிழக அரசு மூடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எதிர்த்து, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து உள்ளது.  அதைத்தொடர்ந்து, ஆலையை திறப்பது  குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

இந்த விசாரணை ஆணையம் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் ஆய்வு செய்து வருகிறது. இன்று சென்னை யில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,   ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறி உள்ளார்.

அதே வேளையில் ஸ்டெர்லைட் ஆலையில் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பது தான் எங்களின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த ஆலை மூடப்பட்டது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இந்த  பொருளாதார பாதிப்பு தூத்துக்குடி மக்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்துக்கும் நல்லதல்ல  என்று கூறியவர், தூத்துக்குடி பொதுமக்கள் சிலர்  பொருளாதார பாதிப்பு குறித்து தெரிவித்ததாக கூறி மக்களை திசை திருப்பி உள்ளார்.

மேலும்,  குமரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ரூ.28 ஆயிரம் கோடி செலவில் துறைமுகம் அமைக்க ஏற்பாடு செய்தது. ஆனால் இதனை சிலர் வேண்டுமென்றே தடுத்து வருகிறார்கள்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியா முழுவதும் 10 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் செலவில் மருத்துவ காப்பீடு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது ஏழை மக்களுக்கு மிகவும் பலன் உள்ளதாக இருக்கும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கூறிவருகிறார். மகன் மீதான பாசம் காரணமாக அவர் அவ்வாறு கூறிவருகிறார். மத்திய அரசின் தலையீடு காரணமாக அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பது தவறு.

சட்டத்தை பார்க்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களை கவனிக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் என்ன கூறுகிறார் என்பதை கேட்க வேண்டும். இதை எல்லாம் செய்யும்முன்பு பாரதிய ஜனதாவை குறைசொல்வது சரியல்ல.

நெல்லை மாவட்டம் தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகாபுஷ்கரணி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்ய வேண்டும். இது பற்றி மாநில அரசிடம் பேசப்படும்.

பாரதிய ஜனதாவுடன் ஒருபோதும் தி.மு.க. கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். சிறந்த வீரரான அவர் தற்போது நிழலுடன் யுத்தம் செய்கிறார்.

கடந்த 1962-க்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி அமைத்தே தேர்தல்களை சந்தித்து வருகிறது.

பாரதிய ஜனதா கட்சி யாருடன் கூட்டணி சேரும் என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யும். கூட்டணியே இல்லை என்று சொல்லவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

மத்திய அமைச்சரின் ஸ்டெர்லைட் ஆலை குறித்த  பொறுப்பற்ற பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்ட மக்களே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கொதித்தெழுந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பேசியிருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.