‘மக்கள் நீதி மையம்’ கட்சி பெயர் பதிவு செய்யப்பட்டது: சின்னம் குறித்து விரைவில் முடிவு! கமல்

துணை தேர்தல் ஆணையருடன் நடிகர் கமல்ஹாசன்  சந்திப்பு

டில்லி:

லைமை தேர்தல் கமிஷன் அழைப்பை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்  நடிகர் கமல்ஹாசன்  இன்று டில்லியில் தேர்தல் ஆணையத்தில் ஆஜரானார். அவரின் புதிய கட்சி பெயரான  மக்கள் நீதி மையம் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பதிவு செய்துள்ளது.

புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்த  நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம்  21ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து புறப்பட்டு மதுரை வந்தடைந்து, அன்று இரவு அங்கு நடைபெற்ற பிரமாண்ட  பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது  கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்தார்.  அதைத்தொடர்ந்து  கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முறைப்படி பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்  கொடுத்திருந்தார்.

அதைத்தொடர்ந்து  கமல்ஹாசனின் புதுக்கட்சி குறித்து ஆட்சேபம் தெரிவிக்க தேர்தல் ஆணையம் செய்தித்தாளில் விளம்பரம்  வெளியிட்டது. அதற்கு எந்தவித  ஆட்சேபமும் வரவில்லை. அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராக கமலஹாசனுக்கு  தேர்தல் ஆணையம்  அழைப்பு விடுத்தது.

தேர்தல் ஆணைய அலுவலக  வளாகத்தில் கமல்ஹாசன்

அதன்படி இன்று தேர்தல் ஆணையத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆஜர் ஆனார். காலை 11 மணியளவில், அவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திந்தித்துப் பேசினார்.

அப்போது மக்கள் நீதி மய்யம்  கட்சியின் சட்டதிட்டங்கள், நோக்கம், சின்னம், கொடி போன்றவை குறித்து துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமாரிடம் கமல் விளக்கி பேசினார். அதைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம்  கட்சியின் பெயர்  முறையாக பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கட்சியில் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். கட்சியின் சின்னம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் கமல் கூறினார்.