அதிமுக செயற்குழுவில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை:

நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் வர உள்ள தேர்தல்கள் குறித்து வியூகங்கள் வகுக்கப்பட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

18எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ள நிலையிலும், டில்லி உயர்நீதி மன்றம் அதிமுக தேர்தல் விதிகள் தொடர்பாக  ஆணையம் முடிவெடுக்க  உத்தரவிட்ட நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில்,செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் பெரியார் ஆகியோருக்கும் பாரத ரத்னா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து கட்சித்தலைவர்கள் கட்சி விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது,  புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, கட்சியில் காலியாக இருக்கும் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், கட்சிக்காக தனது பதவியை ராஜினாமா  செய்யத் தயாராக இருப்பதாக ஓபிஎஸ் பேசியதாகவும் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஏ.கே.போஸ் மறைந்த தொகுதியான திருப்பரங்குன்றம், திமுக தலைவர் கருணாநிதி மறைந்த தொகுதியான திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், உள்ளாட்சி தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அதிமுக செயற்குழு சிறப்பாக நடைபெற்றதாக கூறினார். மேலும், செயற்குழுவில் நடைபெற உள்ள  தேர்தல்கள் குறித்து வியூகங்கள் வகுக்கப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டார்.