கேரளாவிற்காக உதவிக்கரம் நீட்டும் ஐரோப்பிய ஒன்றியம் – நிவாரண நிதிக்காக ரூ.1.5 கோடி வழங்க முடிவு

கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.1.5 கோடியை இந்திய ரெட் கிராஸ் சங்கம் மூலமாக வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஒன்றியம் இந்த நிதியை வழங்க முன்வந்துள்ளது.

இம்மாதம் முதல் தேதியில் இருந்து கேரளாவில் 50 வருடங்கள் இல்லாத அளவிற்கு கனமழை பொழிந்ததால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டது. 13 மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் 8லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 50 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் சிக்கி இடிந்து விழுந்தன.

kerala-flood-rlief

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கத்தினால் 9000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழிவில் இருந்து கேரளா மீள்வதற்கு மத்திய, மாநில அரசுகள், பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி வழங்க முன்வந்துள்ளது.

இந்நிலையில் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய அரோப்பிய ஒன்றியம் இந்திய ரெட் கிராஸ் சங்கம் மூலமாக கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.1.53 கோடியை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்தியில், ” பருவ காலநிலை மாற்றத்தினால் இந்தியாவில் உள்ள கேரளா மிகப்பெரிய பேரிழப்பை சந்தித்துள்ளது. இந்திய ரெட் கிராஸ் சங்கத்தின் மூலமாக ஐரோப்பிய ஒன்றியம் 19 லட்சம் யூரோக்களை (ரு.1.53 கோடி) வெள்ள நிவாரண நிதியாக வழங்க முன்வந்துள்ளது “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண தொகை மூலமாக 25ஆயிரம் பேருக்கு பேரிடையாக உதவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் இருந்து வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் வீட்டு உபயோகப்பொருட்கள், அத்யாவசிய பொருட்கள் மற்றும் ஷெட்டர்கள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிக்கன் குன்யா, மலேரியா, டெங்கு மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இந்த நிதியின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.