வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் தோல்வி

லண்டன்: உலகக்கோப்பையில் தனது இரண்டாவது ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இலங்கை அணி.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி எடுத்தது வெறும் 201 ரன்களே. எப்போதுமே பலவீனமான அணிகளுக்கு எதிராக பேட்டிங் சூரத்தனம் காட்டும் இலங்கை இந்தமுறை நேர்மாறாக ஆடியது.

இலங்கை அணியின் பேட்டிங் 37வது ஓவரிலேயே முடிவுக்கு வந்துவிட்டதுதான் சோகம். வெறும் 57 ரன்களுக்கு தனது 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது அந்த அணி. பின்னர் மழை குறுக்கிடவே, 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிர்ணயிப்பின்படி ஆடத் தொடங்கியது ஆஃப்கானிஸ்தான்.

ஆனால், இப்போட்டியில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான் ஆரம்பத்திலேயே தடுமாறத் தொடங்கியது. வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவே 200 ரன்களுக்கு மேலே எடுத்த ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கைக்கு எதிராக 187 ரன்களை எட்டமுடியாமல் போனது.

தொடக்கத்தில் 57 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற பரிதாப நிலையிலிருந்த அந்த அணி பின்னர் மெதுவாக மீண்டு வந்தாலும், நினைத்ததை சாதிக்க முடியாமல் போய்விட்டது. 33 ஓவர்கள் விளையாடிய ஆஃப்கன் அணி, 152 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட்டது.

இலங்கை சார்பில், பிரதீப் மற்றும் மலிங்கா ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர்.