டெல்லி: உ.பி. ஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், உ.பி. மாநில பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி ஆகியோர் மாநில அரசு மீது கடுமையாக குற்றம் சாட்டி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில், உயர்ஜாதியினரால் கடத்தி,  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 19 வயது தலித் இளம் பெண், நாக்கு அறுக்கப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் இன்று அதிகாலை காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் எரியூட்டப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 4 பேர் இணைந்து, இந்த கொடூரத்தை அரங்கேற்ற உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.  குற்றவாளிகள் நான்கு பேருக்கும் உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்று மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல்காந்தி கண்டனம்

இந்த நிலையில்,  முன்னாள் தலைவரம்,  காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். அதில், ”இந்தியாவில் ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள், அதில் உண்மைகள் அடக்கப்படுகின்றன. மேலும் பெண்ணின் இறுதிச் சடங்கிற்கான உரிமையும் அவரது குடும்பத்திடமிருந்து பறிக்கப்படுவது அநியாயமானது” என்று கடுமையாக சாடியுள்ளார்.

பிரியங்கா காந்தி விமர்சனம்

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

 “ஹத்ராஸ், ஷாஜகான்பூர் மற்றும் கோரக்பூரில் நடைபெற்றுள்ள கற்பழிப்பு சம்பவங்கள் மாநிலத்தை உலுக்கியுள்ளன. உ.பி.யில் சட்டம் ஒழுங்கு பெருமளவில் மோசமடைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. குற்றவாளிகள் வெளிப்படையான குற்றங்களைச் செய்கிறார்கள்.” என கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், “உத்தரப்பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பு. இந்தப் பெண்ணைக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.”

இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.