அமீரகத்தில் செயல்பட்ட பிரபல அஞ்சப்பர் உணவகத்துக்கு சீல்!

மிழகத்தின் பிரபலமான அஞ்சப்பர் செட்டிநாடு அசைவ உணவகத்தின்  அபுதாபி கிளையை யு.ஏ.இ. அரசு சீல் வைத்துள்ளது.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான அசைவ உணவகங்களில் ஒன்று அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம். தமிழகத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து, ஐக்கிய அரபு நாட்டின் (யு.ஏ.இ.) அபுதாபி நகரில், முக்கிய சாலையில் தனது கிளையை இந்த நிறுவனம் திறந்தது.  அந்நகரில் ஏராளமான இந்தியர்கள்.. குறிப்பாக தமிழர்கள் வசிப்பதால் உணவகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்,   உணவகத்தை , அபுதாபி உணவுக்கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது உணவகம் சுகாதாரமாக பராமரிக்கப்படவில்லை என்று  குற்றம்சாட்டினர்.

உணவு பரிமாறப்படும் அறை, சமையல் அறை, ஒளி சாதனங்கள், குளிர்சாதனப்பெட்டி ஆகியவரை சரிவர பராமரிக்கப்படவில்லை என்றும், உணவு மூலப்பொருள் சேமிப்பு கிடங்கில் பூச்சிகள் நடமாடுவதாகவும் அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். இதே நிலை தொடர்ந்தால் உணவகத்துக்கு சீல் வைக்கப்ப்டும் என்றும் எச்சரித்தனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் அஞ்சப்பர் உணவகத்தில் அபுதாபி உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனையிட்டனர். முன்புபோலவே சுகாதாரமின்றி உணவகம் இருந்ததாக கூறப்படுகிறது.   இதையடுத்து அந்த உணவகத்துக்கு உடனடியாக சீல் வைத்தனர்.