பிரபல இயக்குநர் சுசிகணேசன் காரில் வைத்து பலவந்தப்படுத்த முயன்றார்! :  கவிஞர் லீனா மணிமேகலை புகார்

ன்னை காரில் வைத்து பலாத்காரப்படுத்த முயன்றார் என்று திரைப்பட இயக்குனர் சுசி கணேசன் குறித்து ஊடகவியலாளரும், திரைத்துறை இயக்குனராகவும் உள்ள லீனா மணிமேகலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

#MeToo என்ற ஹேஷ் டேக் மூலம் வக்கிர ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ட்விட்டர் பக்கத்தில் தங்களது சோகத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, கர்நாடக இசை வல்லுநர்கள் டி.என். சேஷகோபாலன், சசிகிரண், ரவிகிரண், பிராமணர் சங்க தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் குறும்பட இயக்குநரும் கவிஞருமான லீனா மணிமேகலை, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரபல திரைப்பட இயக்குநர் சுசிகணேசன் (திருட்டுப்பயலே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்) தன்னிடம் அத்துமீறி நடந்துகொள்ள முயன்றதாக தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகை பாவனா பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்டபோது இரண்டு வருடங்களுக்கு முன் இந்த பதிவை எழுதி பதிவிட்டார். அப்போது இயக்குநரின் பெயரைச் சொல்லவில்லை.

ஆனால் இன்று அதே பதிவை பகிர்ந்து, குறிப்பிட்ட அந்த இயக்குநர் சுசிகணேசன்தான் என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.

லீனா மணிமேகலை

லீனா மணிமேகலையின் பதிவு:

“2005 இருக்கும். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வேலை செய்துக் கொண்டிருந்தேன். அன்று ஒரு பிரபல இளம் இயக்குநரை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நேர்காணல் செய்தேன். ஷூட்டிங் முடிந்தபோது இரவு ஒன்பதரை மணி. வழக்கமாக நான் ஆட்டோ எடுத்து தான் வீடு திரும்புவது வழக்கம். ஸ்டூடியோவில் இருந்து தெருமுனை வரை நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, நான் நேர்காணல் செய்த இயக்குநரின் கார் என்னருகில் வந்து நின்றது. “வடபழனி தானே வீடு, நான் வேணும்னா ட்ராப் பண்ணிடறேன்” என்று சொன்ன “இயக்குநரை” நம்பி காரில் ஏறினேன்.

லீனா மணிமேகலை பதிவு

ஏறிய சில நிமிடங்கள் உரையாடல் நன்றாகத்தான் போனது. திடீரென அவர் குரலின் டோன் மாறியது. விலை உயர்ந்த அந்தக் காரின் சென்டரல் லாக் சத்தமாக ஒரு முறை சீறி அடங்கியது. என் மடியில் இருந்த மொபைலைக் கைப்பற்றி அதை ஆஃப் செய்து காருக்குள் எங்கோ எறிந்தார். தன் அபார்ட்மெண்டுக்கு நான் வரவேண்டும் என்று மிரட்டினார். அதிர்ச்சியில் வெலவெலத்துப் போன எனக்கு கொஞ்சநேரம் எதுவும் புரியாமல் செயலிழந்துப் போனேன்.

சுதாரித்து முதலில் தன்மையான குரலில் என்னை உடனே இறக்கிவிடுமாறு கேட்டேன். பின் கெஞ்சிக் கேட்டேன். கார் கதவை உடைத்து விடுவேன் என மிரட்டினேன். அலறினேன். இருபது நிமிடத்தில் விட வேண்டிய இடத்திற்கு 45 நிமிடங்களாக கார் சென்னை தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்தது. என் பையில் ஒரு குறுங்கத்தி வைத்திருப்பேன். பொறியியல் கல்லூரி காலத்தில் இருந்து எனக்கு அது வழக்கம். அன்று அதற்கு வேலை வந்தது. ஒரு குறுங்கத்தி அந்த இயக்குநர் பொறுக்கியை என்னை என் வீட்டின் அருகில் இறக்கிவிட வைத்தது. என் மொபைலை திருப்பித் தர வைத்தது.

சுசிகணேசன்

இன்று இவ்வளவு ரைட்ஸ் பேசும் எனக்கு அன்று நடந்ததை நெருக்கமான வர்களிடம் சொல்வதற்கு கூட தைரியமில்லை. ஊடக வேலை வேண்டாம் என்று கண்டித்துக் கொண்டிருந்த குடும்பம் இந்த நிகழ்வை காரணம் காட்டி வேலையில் இருந்து நின்றுவிட சொல்வார்கள் என்று அச்சம். “நோ” சொல்லிவிட்டதால் திரைத்துறை வட்டாரத்தில் செல்வாக்குள்ள அந்த “இயக்குநர்” என் பெயரைக் களங்கப் படுத்துவான் என்ற சிறுபிள்ளைத்தனமான பதட்டம் வேறு. எனக்குள்ளே புதைத்த பல கசப்புகளில் இந்நிகழ்வும் ஒன்று. பல வருடங்கள் கடந்துவிட்டன. நினைத்துப் பார்த்தால் இன்னும் நடுக்கமாகத் தான் இருக்கிறது.

இன்று நடிகர் பாவனாவுக்கு நிகழ்ந்த அநியாயத்திற்காக திரைத்துறை “ஹீரோக்களும்” “இயக்குநர்களும்” “குரல்” கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லது. அப்படியே தங்களையும் தங்கள் படைப்புகளில் இருக்கும் பெண் வெறுப்பையும் பரிசீலனை செய்ய வேண்டும். சுட்டு விரலை உள்பக்கமாக இவர்கள் திருப்ப வேண்டும். “ஆண்மை” தானே இந்த ஊரில் “ஹீரோயிஸம்”?

தன் மேல் விழ நேரிடும் நூறாயிரம் கேள்விகளுக்கும், பார்வைகளுக்கும் அஞ்சாமல், நடந்ததை வெளியில் சொல்லி சட்டத்தை நாடியிருக்கும் பாவனாவின் தோளோடு தோள் நிற்கிறேன்” என்று லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார்.