கவுகாத்தி:

பொது நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என்று 16 வயது இஸ்லாமிய சிறுமிக்கு 50 இஸ்லாமிய மத குருக்கள் பத்வா பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி  உள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நாகித் அப்ரீன். 16 வயது சிறுமி. இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த சாதனையாளர்கள் தேடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, பாடினார். இவரது அபார பாட்டுத்திறமை அனைவரையும் கவர்ந்தது. அந்த போட்டியிலும் வெற்றிபெற்றார். இதையடுத்து பெரும் புகழ் பெற்றார். சோனாக்சி சின்ஹா நடித்த அகிரா என்ற இந்தி படத்தில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த நிலையில், இவர் பொது நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என இஸ்லாமிய மத குருக்கள் 50 பேர் சேர்ந்து பாத்வா (தடை) விதித்துள்ளனர்.  “பொது இடங்களில் பாடுவது இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள நாகித் அப்ரீன், “என்னை பாட அனுமதிக்காவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று தெரிவித்தார். மேலும், “ பல்வேறு அமைப்பு மற்றும் மக்கள் எனக்கு போன் செய்து ஆதரவு தெரிவித்துள்ளனர் மேலும் அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்தா எனக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துதருவதாக  உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்தா,” திறமையான பாடகருக்கு சில அமைப்புகள் தடை விதிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். கலைஞர்களின் பாதுகாப்புக்கு தேவையான உதவியை மாநில அரசு செய்யும்” என்று தெரிவித்தார்.