மெர்சலை கண்டு பாஜகவுக்கு பயம்! குஷ்பு

சென்னை,

மெர்சல் படத்தை கண்டு பாரதியஜனதா கட்சியினர் பயந்துபோய் உள்ளது தெரிகிறது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு கூறி உள்ளார்.

‘மெர்சல்’ படத்தில் வரும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாரதியஜனதா கட்சியினர் குரல் கொடுத்து,  அவர்களின் அச்சத்தைக் காட்டுகிறது குஷ்பு கூறி உள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.

இந்த படத்தில்  ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா  தொடர்பான வசனங்களை  நீக்கப்பட வேண்டும் என்று பாஜக கட்சி தலைவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் மெர்சலாயிட்டேன். முழுவதும் ஒன் மேன் ஷோ. இந்தத் தீபாவளிக்கு கண்களுக்கு விருந்தாக இருக்கிறார் நடிகர் விஜய். சோர்வான ஒரு நொடி கூட இல்லை. படத்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்போம். ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் என பல சமூக பிரச்சினைகளை தைரியமாக நேரடியாகத் திரையில் பேசியதற்கு பாராட்டுகள்.

சிலருக்கு மெர்சலால் பல இரவுகள் தூக்கம் இழக்க நேரிடும். படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் எனச் சொல்வது சுதந்திரத்தை நசுக்குவதைப் போல. அது பாஜகவின் அச்சத்தையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.