டில்லி:

மிழர்களின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது என்று  தம்பிதுரை அதிரடியாக  குற்றச்சாட்டியிருக்கிறார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, பாராளுமன்ற மேல்–சபையில் வரும் (ஜனவரி)  5ம்  தேதிக்குள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. இந்த திருத்த மசோதாவில்  தமிழ்நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 அம்சங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி இருக்கிறது.

இந்த கோரிக்கையையும், தமிழக டேங்கர் லாரி உரிமையாளர்களின் அகில இந்திய டெண்டர் உரிமைக்கான கோரிக்கையையும் மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவதற்காக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் டில்லி சென்றார்.

அங்கு அவரும், அ.தி.மு.க. எம்.பி.க்கள் சிலரும் சேர்ந்து பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை தலைமையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியை நேற்று முன்தினம் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

பிறகு அவர்கள் நேற்று காலை டேங்கர் லாரி உரிமையாளர்கள் சிலருடன் சென்று பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“நாமக்கல் பகுதியில் கியாஸ் டேங்கர் லாரிகள் அதிகம் இருக்கின்றன.  அந்த லாரி உரிமையாளர்கள் அகில இந்திய அளவில் தொழில் செய்து வருகிறார்கள்.   கியாஸ் சிலிண்டர் டெண்டர் உள்பட எந்த டெண்டர் வந்தாலும் அகில இந்திய அளவில் பங்கேற்று டெண்டர் எடுத்து தொழில் செய்கிறார்கள்.  இந்த நிலையில், எல்.பி.ஜி. டெண்டர்களில் இனிமேல் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற திட்டத்தை மத்தி அரசு கொண்டு வந்துள்ளது. இது மாநில சுயாட்சிக்கான அடிப்படை என்றாலும், தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமும்கூட.

இதைக் குறிப்பிட்டு தமிழக லாரி உரிமையாளர்களின் சிக்கல்களை பெட்ரோலியத்துறை மந்திரியிடம் விளக்கினோம். எங்களது எதிர்ப்பையும் தெரிவித்தோம். ஆனால், இனிமேல் அது முடியாது என்று அமைச்சர் சொல்கிறார்.

இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.  இதுகுறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

மத்திய அரசு பெயரளவில்தான் கூட்டாட்சி தத்துவத்தை பேசுகிறதே தவிர, சில வி‌ஷயங்களில் அப்படி நடந்துகொள்வது  இல்லை. மொழி என்றால் இந்திதான் ஆட்சி மொழி என்கிறார்கள். டேங்கர் லாரிகளுக்கு டெண்டர் விடுவதாக இருந்தால் அந்தந்த மாநிலத்துக்குத்தான் கொடுப்பதாக சொல்கிறார்கள். இப்படி முரண்பட்ட கருத்து கொண்ட ஒரு ஆட்சியாக மத்திய அரசு இருக்கிறது.  தமிழர்களின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாகத்தான் நான் உணர்கிறேன்.

எல்லா திட்டத்திலும் மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக இருக்கிறோம் என்பது கிடையாது. எங்களது உரிமைகள் பறிபோய்விடக்கூடாது என்று குரல் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம்” என்று தம்பிதுரை தெரிவித்தார்.