திருவனந்தபுரம்:

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். இதுதான் கேரளாவில் முதன் உயிரிழப்பு. இதைத்தொடர்ந்து, கேரள மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என மாநில முதல்வர்  பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்து உள்ளது.   மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கொச்சி அரசு மருத்துவமனையில் சிக்கி பெற்று வந்த 69 வயதான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், மக்கள் சமூக விலகலை முறையாக கடைபிடிக்காததால் நோய் பாதித்தவர்கள் மூலம் அவர்கள் சென்று வந்தவர்களும் நோய்க்கு ஆளாகி உள்ளனர்.

மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. நிலைமை படுமோசமாகி வருகிறது. பொதுமக்கள் அரசின் அறிவுரைகளை முறையாக கடைபிடிப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், தற்போதைய நிலையை பார்க்கும்போது மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். தற்போது கேரளாவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 683 பேர் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். 616 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு  இருப்பதாகவும், நோய் தடுப்பு பணிகளை நாம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், கியுபாவில் இருந்து மருந்துகளை வரவழைக்கவும், ரேபிட் பரிசோதனை மேற்கொள்ளவும் மத்திய அரசின் அனுமதியை கேட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.