சென்னை வெள்ளக்காடானாது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல்நாளே இடியுடன் வெளுத்து வாங்கி வரும் கனமழை….

சென்னை: தமிழகத்தில் நேற்றுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அறிவித்த நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போதுவரை (காலை 6.30 மிணி) தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகி விட்டதாகவும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது.  அத்துடன்  தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்ததுடன்,  வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று  சென்னையில் வானம் மேகமூட்டத்துடன், ரம்மியமான சூழல் நிலவி வந்தது. நேற்று இரவுமுதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பாலவாக்கம், ஈ.சி.ஆர், திருவான்மியூர், விருகம்பாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு, வடபழனி, கீழ்ப்பாக்கம், எக்மூர், சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை, திருவொற்டிறயூர், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், பெரம்பூர், மாதவரம் மட்டும் புறநகர் பகுதிகளினான ரெட்ஹில்ஸ், தாம்பரம் என  பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை மட்டுமின்றி  தமிழகத்தின பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.