சென்னை:

மிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் கள்ள ஓட்டு பதிவானது தெரிய வந்துள்ளது. இதுதான் இன்றைய வாக்குப்பதிவின் முதல் கள்ள ஓட்டு என்று நம்பப்படுகிறது.

தேர்தலின்போது கள்ள ஓட்டுக்களை தடுக்கவும், 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தியும், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுத்தான் வருகின்றன.

இந்த நிலையில்,  கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேர்தலில் கள்ள ஓட்டு விழுந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குமரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பிலாங்காலை  பகுதி உள்ள வாக்குச்சவாடி எண் 157ல்  அஜின் என்பவர் தனது வாக்கை செலுத்த வந்துள்ளார். ஆனால், அவரது பெயரிலான வாக்கு இன்று காலையே பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டது. யாரோ ஒருவர் அவரது பெயரில் கள்ளஓட்டு பதிவு செய்துள்ளார்.

பொதுவாக வாக்களிக்கும் முன் வாக்காளர்களின் வாக்காளர் அட்டை அட்டையில் படத்தை வைத்து, வாக்களிப்ப வர் அவர்தான என்பது உறுதி செய்யப்படும். இதை தேர்தல் அலுவலகர்கள் உள்பட, வாக்குச்சாவடியினுள் அமர்ந்திருக்கும் அனைத்து கட்சி முகவர்களும் சரிபார்ப்பது வழக்கம். பொதுவாக வாக்குச்சாவடி முகவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களாகவே இருப்பர். அப்படியிருக்கும்போது, அஜின் பெயரில் மற்றொருவர் கள்ள ஓட்டு போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய,  வாக்குச்சாவடி அதிகாரி, இது தொடர்பாக அரசியல் கட்சியின் முகவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் கள்ள ஓட்டு விழுந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.  கள்ள ஓட்டு போட்ட நபர் வாக்குச்சாவடி முகவர்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.