சிவாஜி- பாரதிராஜா- இளையராஜா கூட்டணியில் உருவான ‘’முதல் மரியாதை’’ திரைப்படம் 35 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் ( ஆகஸ்ட் 15) வெளியானது.
படம் உருவான ‘பிளாஷ் பேக்’ பற்றி விவரித்தார், இயக்குநர் பாரதிராஜா:


‘’ முதல் மரியாதை படத்துக்கான மூலக்கதை ஒரு ஆங்கில சினிமாவில் இருந்தும், தமிழ் கதையில் இருந்தும் எனக்குள் உருவானது.ஒரு பெயிண்டருக்கும், இளம் பெண்ணுக்குமான அன்பு குறித்த படம், அந்த ஆங்கிலப்படம்.
தமிழ் கதை, ஜெயகாந்தன் எழுதிய ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்ற நாவல்’.
பள்ளி ஆசிரியை ஒருவருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் இடையேயான நட்பை பற்றியது, அந்த கதை.
இந்த ஒரு வரியை எனது எழுத்தாளர் ஆர்.செல்வராஜிடம் சொல்ல, அவரால் செதுக்கப்பட்டது தான், முதல் மரியாதை கதை.
இந்த படத்தில் நடிப்பதற்காக சிவாஜி சார், தன்னையே என்னிடம் ஒப்படைத்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
‘எடிட்’ செய்யப்பட்ட படத்தை பார்த்த இளையராஜாவுக்கு, முதலில் படம் பிடிக்கவில்லை.’’ நீதான் பின்னணி இசை அமைக்க வேண்டும்’’ என்று தீர்மானமாக கூறி விட்டேன்.
எனினும், அற்புதமான பின்னணி இசையை தந்திருந்தார். இளையராஜாவின், பின்னணி இசை மிகச்சிறப்பாக அமைந்த படங்களில் முதல் மரியாதையும் ஒன்று.கிளைமாக்ஸ் காட்சிக்கு, அவர் அமைத்திருந்த பின்னணி இசை, என்னை அழ வைத்து விட்டது’’ என்று நெகிழ்கிறார், பாரதிராஜா.
-பா.பாரதி.