டில்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம்

டில்லி :

காவிரி மேலாண்மை  ஆணையத்தின் முதல் ஆலோசனைக் கூட்டம் டில்லியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும்  மத்திய அரசு அமைத்து  உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தலைவர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆணையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு  வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி  தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த மே மாதம் 18ந்தேதி உச்சநீதி மன்றம் வரலாற்று சிறப்பு மிக்க  தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து, உச்சநீதி மன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு  காவிரி வரைவு திட்டத்தை ஏற்படுத்தியது. அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், காவிரி மேலாண்மை ஆணையம்  அமைத்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து,   மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து அரசிதழில் வெளியிட்டது. அதன் காரணமாக  நீர் பங்கீடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக் கும் அதிகாரம் ஆணையத்திற்கே என்ற உச்சநீதி மன்ற உத்தரவுபடி,  காவிரி நீர் தொடர்பான அனைத்து விவரங்களையும் கவனிக்கும் அதிகாரம் மிக்க அமைப்பாக  காவிரி மேலாண்மை ஆணையம்  உருவாகி உள்ளது..

இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரிய உறுப்பினராக அதிகாரிகளை நியமனம் செய்வதில் கர்நாடக அரசு தாமதம் செய்ததை தொடர்ந்து மத்திய அரசே நேரடியாக கர்நாடக சார்பில் அதிகாரிகளை நியமனம் செய்தது. அதன்பிறககே வழிக்கு வந்த கர்நாடக, மாநில அரசு சார்பில் ஆணையத்துக்கு அதிகாரிகளை நியமனம் செய்தது.

அதன்படி  காவிரி மேலாண்மை ஆணையம் டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என் றும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் அலுவலகம் பெங்களூருவில்  இருந்து செயல்படும் . ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைனும், செயலாளராக ஏ.எஸ். கோபாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். நவீன் குமார் மத்திய பொறியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மற்றும் நீர்வளத்துறை நிர்வாகத்தின் பொறுப்பு செயலர் எஸ்.கே.பிரபாகர் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று கர்நாடக,  கேரளா மற்றும் புதுச்சேரி சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து  காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டில்லியில் நடைபெற உள்ளது.

கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், தமிழகத்திற்கு  உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று டில்லியில் காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம் நடைபெற உள்ளது.

இன்றைய முதல் ஆணையக் கூட்டத்தில் எந்த முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து 4 மாநிலங்களிலும் பரபரப்பான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.