லோக்பால் சட்டத்துக்கே முதல் கையெழுத்து: பெண்கள் விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு

சென்னை:

சென்னை ஆழ்வார்பேட்டையில் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நான் முதல்வராக வந்தாலோ அல்லது, வேறு யார் முதல்வராக வந்தாலும் முதல் கையெழுத்து லோக்பால் சட்டத்துக்குத்தான் என்று கூறினார்.

ஆழ்வார்பேட்டையில் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு,    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து பேசிய கமல்,   அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

அதையடுதது, விழா மேடையில் நடிகர் பார்த்திபன் நடிகர் கமலுடன் நேருக்கு நேர் உரையாடினார். அப்போது, அவர்   முதலமைச்சரானால் உங்களுடைய முதல் கையெழுத்து எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த கமல்,  தற்போதைய லோக்பால் சட்டம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. எனவே, நான் முதல்வராக ஆனால் மீண்டும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்கவே முதல் கையெழுத்து போடுவேன் அல்லது  வேறு யார் முதல்வரானாலும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்க முதல் கையெழுத்திட வைப்பேன் என்றும் கமல் தெரிவித்தார்.