‘நாடாளுமன்ற ஜனநாயத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது!’ மகாராஷ்டிரா அரசு குறித்து பீட்டர்அல்போன்ஸ்

சென்னை:

காராஷ்டிரா மாநிலத்தில், பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசு பதவி ஏற்றுள்ள நிலையில்,  ‘நாடாளுமன்ற ஜனநாயத்தின் எதிர்காலமே மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது’  தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்து உள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ்

மகாராஷ்டிர மாநிலத்தில், நேற்று மாலை வரை, சிவசேனா தலைமையில் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்து வந்த நிலையில், உத்தவ் தாக்கரே மாநில முதல்வராக பதவி ஏற்பார் என்றும், 3 கட்சிகள் இடையே குறைந்த பட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்து. ஆனால், நேற்று இரவு தேசியவாத காங்கிரஸ் கட்சி, பாஜக இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இன்று காலை பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவை பதவி ஏற்றது.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு நடைபெற்றுள்ள இந்த அரசியல் திடீர் திருப்பம் குறித்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது,

மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ள அரசியல் நிகழ்வு,  ‘நாடாளுமன்ற ஜனநாயத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் மத்தியில் உள்ள பாஜக அரசு மக்களின் மீதும் அரசியல் கட்சிகளின் மீதும் தேர்தல் நடைமுறைகளின் மீதும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி  உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.

பாஜக அரசின்  இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுக்கும் என்று கூறியவர், நேற்றுதான்  சரத்பவார், ‘உத்தவ் தாக்ரே முதலமைச்சராக இருப்பதற்கு ஒத்து கொண்ட நிலையில், நேற்று இரவு என்ன நடந்தது என்று தெரியவில்லை…  இது நாடாளுமன்றத்தில் ஜனநாயகமே இல்லாத ஒரு நிலைமைக்கு இந்தியாவை தள்ளுமோ என்று நான் அஞ்சுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.