கஜா புயல் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்கிறது:  சென்னையில் மழை

--

இன்று காலை முதல் சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.  கடந்த மூன்று தினங்களாக கடல் பகுதியில் மையம்  கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .

மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்த  கஜா புயலின் வேகம் தற்போது மணிக்கு 8 கி.மீட்டர் வேகமாக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ”சென்னைக்கு அருகே 380 கி.மீட்டர் தொலைவிலும், நாகை அருகே 400 கி.மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. பாம்பன் – கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை கஜா புயல் கரையைக்கடக்கும் என்றும் அப்போது புயல் வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும்” என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில்  இன்று  அதிகாலை முதல், வேளச்சேரி , கிண்டி, அனகாபுத்தூர், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வண்டலூர், பெருங்களத்தூர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது.  சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 11 மணி முதல் மிதமான காற்றுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் அறிவி்த்துள்ளது.