சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர்  அ. குமரேசன்

கிரிக்கெட் விளையாட்டில் குறிப்பிட்ட ஒரு போட்டி எப்படி ஆடப்பட்டது, பந்து வீச்சாளர் எவ்வாறு வீசினார், மட்டையாளர் என்ன தவறு செய்தார், மைதானம் எவ்விதம் இருந்தது, முன்பு என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டன என்றெல்லாம் நுணுக்கமாக அலசுகிற அளவுக்கு நான் வல்லுநர் அல்ல. ஆயினும் வாய்ப்புக் கிடைக்கிறபோது நேரடி ஒளிபரப்புகளை ரசிக்கிறவன்தான். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பீசிசிஐ) அணியினர் வெற்றிபெற்றால் மகிழ்ச்சியடைகிறவன்தான். ஆயினும் வெற்றிபெறுகிற எதிர்நாட்டணியினரின் திறன்களையும் மெச்சுகிறவன். மறு ஒளிபரப்புகளைப் பார்க்க விரும்பாதவன். வாரியம் ஏன் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பாக இருக்கக்கூடாது, எதற்காகப் பெரிய முதலாளிகளின் மனமகிழ் மன்றமாக இருக்க வேண்டும் என்று பாமரத்தனமாகக் கேட்கிறவன்.  இவ்வளவுதான் எனது கிரிக்கெட் ஈடுபாடு.

ஆனால், சமூக அரசியல் ஈடுபாடு காரணமாக, முன்பு ஒரு கேள்வி மனதில் எழுந்ததுண்டு. தென்னாப்பிரிக்கா விலிருந்து வருகிற அணியில், அந்த நாடு சுதந்திரம் பெற்ற பிறகும், அதன் பூர்வீக மக்களாகிய கறுப்பினத்தவர்கள் யாரும் இல்லையே ஏன் என்ற கேள்விதான் அது. நண்பர்களிடம் கேட்பேன், சரியான பதில் கிடைத்ததில்லை. அந்த அளவுக்கு அங்கே இன்னமும் வெள்ளையர் நிறவெறி ஆதிக்கம் தொடர்கிறது என்று மட்டும் புரிந்துகொள்வேன்.

அண்மை ஆண்டுகளாக அந்தக் காட்சி மாறியுள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் கறுப்பினத்தவர் உள்ளிட்ட பிற இனத்தவர்கள் நான்கைந்து பேராவது இடம்பெறுகிறார்கள். அணியில் இடம்பெறத்தக்க அளவுக்கு இப்போதுதான் அவர்களுடைய திறமை வளர்ந்திருக்கிறதா? காலனியாட்சியிலிருந்து அந்நாடு விடுதலை பெற்ற பிறகும் அவர்களை இடம்பெறச் செய்ய விடாமல் ஆதிக்கம் செலுத்திவந்த நிறவெறிப் பாகுபாட்டிற்கு இப்போதுதான் முடிவுகட்ட முடிந்திருக்கிறது. உள்நாட்டு  அணிகளில் கலக்கிக்கொண்டிருந்தவர்கள்தான் அவர்கள். இப்போது பன்னாட்டுப் போட்டிகளுக்கான தேசிய அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இடம் பிடித்ததற்கு மிக முக்கியமான காரணம் இட ஒதுக்கீடு – இங்கே பலரையும் முகம் கோண வைக்கிற கொள்கை! ஆம், பன்னாட்டுக் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியில் குறைந்தது 6 பேராவது வெள்ளையர் அல்லாத பிற இனத்தவர்களாக இருக்க வேண்டும், அதில் 3 பேர் நிச்சயமாகக் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்ததால் இந்த மாற்றம்!

இதன் பின்னணியில் 2003ம் ஆண்டின் ‘கோல்பாக் விதி’ என்ற ஒரு பன்னாட்டு உடன்பாட்டு விதி இருக்கிறது. ஸ்லோவாக் நாட்டின் கைப்பந்து ஆட்டக்காரர் மாரோஸ் கோல்பாக் பெயரில் உருவாக்கப்பட்ட விதி இது. இந்த விதியின்படி, ஐரோப்பிய ஒன்றிய அமைப்பில் இணைந்துள்ள நாடுகளின் பன்னாட்டு உறவு ஏற்பாடுகளில், அரசு ஊழியர்களுக்கான நியமன விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்! அதாவது ஒரு நாட்டு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அணியில், அரசு ஊழியர்களை நியமிப்பதில் கடைப்பிடிக்கப்படுகிற இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையிலேயே, பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்!

ஐரோப்பிய ஒன்றியத்தில் தென்னாப்பிரிக்கா ஒரு உறுப்பினர். ஆகவே கோல்பாக் விதியைக் கடைப்பிடித்தாக வேண்டும். எல்லா வகையான விளையாட்டு அணிகளுக்கும் இது பொருந்தும்.

அவ்வளவு எளிதாக விதியை நடைமுறைப்படுத்திவிட முடியவில்லை. இங்கே இடஒதுக்கீட்டு அசூயையாளர்கள் சொல்கிற அதே காரணங்களைச் சொல்லி அங்கேயும் பலர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். வேறென்ன – இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுத்தால் “தகுதி” அடிபட்டுவிடும், “திறமை”ஒதுக்கப்பட்டுவிடும் என்ற வாதம்தான். எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்ல, கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த வெள்ளை இன நட்சத்திர ஆட்டக்காரர்கள் சிலர் அடுத்தடுத்து அணியிலிருந்து விலகினார்கள், இங்கிலாந்துக்குக் குடியேறி அந்நாட்டு அணியில் சேர்ந்து பந்துவீசவும், மட்டை சுழற்றத் தொடங்கினார்கள். தேசமாவது பற்றாவது! இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகமும் இப்படி வந்தவர்களுக்கு செமத்தியான பணம் கொடுக்க முன்வந்தது. ஆனால், அவர்கள் வெளியேறியதற்கும், வேறு நாட்டணியில் இணைந்ததற்கும் காரணமாக இருந்தது பணம் மட்டுமல்ல, நம்மை விடத் தாழ்ந்தவர்களோடு சமமாக நின்று விளையாடுவதா என்ற மேலாதிக்கக் குணம் அதிலே இருந்தது என்பதை நாம் புரிந்துகொள்வது கடினமல்ல.

முன்பு தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த வரையில், அந்த அரசு கடைப்பிடித்த நிறவெறிக் கொள்கைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், உலக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

நெல்சன் மண்டேலா உள்ளிட்டோரின் நெடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்கள், நெல்சன் மண்டேலா போன்றோரின் தீரம் – தியாகம் ஆகியவற்றைத் தொடர்ந்து  தென்னாப்பிரிக்கா விடுதலை பெற்றது. நிறவெறிக்கொள்கை ஒழிக்கப்பட்டது. அதன் பின்னர்தான் பன்னாட்டுப் போட்டிகளில் இடமளிக்கப்பட்டது. சுதந்திரம் என்பது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல, இன ஒடுக்குமுறை உள்ளிட்ட சமூக விலங்குகளை உடைக்கும் சுதந்திரமும் இணைந்ததுதான் என்பது அங்கே நிலைநாட்டப்பட்டது. இன்று பல்வேறு இனத்தவர்களும் பங்கேற்கிற தென்னாப்பிரிக்க அணி உலக மைதானங்களில் சாதனை படைத்து வருகிறது.

தற்செயலாய், இது தொடர்பாக ஓராண்டுக்கு முன் வந்த ஒரு செய்திக் கட்டுரையை இப்போது படிக்கக் கிடைத்த வாய்ப்பு, சமூக நீதிக்கான ஒரு முக்கிய வழிமுறையாகிய இட ஒதுக்கீடு கொள்கை இந்தியாவில் கொச்சைப்படுத்தப்படுவது பற்றிய சிந்தனையைக் கிளறியது. உண்மையில், பெரும்பகுதி மக்களின் தகுதியையும் திறமையையும் வெளிப்படுத்த விடாமல், “உயர்சாதி” என்று சொல்லிக்கொள்கிற பிரிவினருக்கான முழு இட ஒதுக்கீடு பன்னெடுங்காலமாகத் தடுத்து வந்திருக்கிறது. அவ்வாறு தடுக்கப்பட்டதால், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த திறமையாளர்கள் புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களது பங்களிப்பால் மொத்தத்தில் இந்திய நாட்டிற்கும், குறிப்பாக பல்வேறு துறைகளுக்கும் கிடைத்திருக்க வேண்டிய பெருமிதங்கள் புதைக்கப்பட்டன. இத்தனை கோடி மக்கள் வாழும் இந்தியா ஏன் ஒலிம்பிக் போட்டிகளில் இன்னமும் மிகத் தாழ்வான இடத்தில் இருக்கிறது என்ற கேள்விக்கும் இதில் பதிலிருக்கிறது.

தமிழில் ஒரு திரைப்படம் நினைவுக்கு வருகிறது. சுசீந்திரன் இயக்கத்தில் 2014ல் வந்த ‘ஜீவா’ அந்தப் படம், கிரிக்கெட் அணிக்குத் தேர்வு செய்யும் இடத்தில் இருக்கிற ஒரு தொழிலதிபர், போட்டியாளரைத் தட்டிக்கொடுப்பது போல முதுகைத் தடவிப்பார்த்து, அவர் எதிர்பார்த்த சிறு நூலளவு அடையாளம் விரலில் தட்டுப்படாததால், அந்த இளைஞரின் எதிர்காலத்தை இப்போதே ‘ஸ்டம்ப் அவுட்’ செய்வதாக ஒரு துணிச்சலான காட்சி வரும். நடைமுறையில் அப்படியெல்லாம் இல்லை என்று எவரும் மறுக்க முடியாத காட்சி அது. விளையாம்டடில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் இந்த இழிவைக் காண முடியும்.

அரசுத்துறைகளின் உயர்நிலைப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியினரும் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள் என்பது, இட ஒதுக்கீடு கொள்கை இங்கே முழு நேர்மையோடு செயல்படுத்தப்படவில்லை என்பதற்கு சாட்சி. அதனால் அந்தத் துறைகளின் பன்முக வளர்ச்சி தடைப்பட்டிருக்கிறது என்பது கண்கூடான காட்சி.

தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட மாற்றம் பற்றிய செய்தி, மற்ற நாடுகளில் இட ஒதுக்கீடு இல்லை என்ற வாதம் எந்த அளவுக்கு உண்மையிலிருந்து வெகுதொலைவு விலகியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இன்று தொழிற்சங்கங்கள் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கிவிட்டன. தொழிலாளர் நியமனத்தில் மட்டுமல்ல, தொழில் முதலீட்டிலேயே கூட, சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவரலாம் என முன்பு பாமக ஒரு நிலைப்பாட்டை அறிவித்தது. ஒரு பெரும் அசைவுக்கு இட்டுச் செல்லக்கூடிய கோரிக்கை என்று அப்போது நான் எழுதினேன். அந்தக் கோரிக்கையை அந்தக் கட்சி பிறகு  வலியுறுத்தாமல் விட்டுவிட்டது ஏன்?

இது பற்றி சில சமூக ஆர்வலர்களோடு உரையாடிக்கொண்டிருந்தபோது, “இக்கோரிக்கையை தலித், பழங்குடியினர் அல்லாத பிற சமூகங்களைச் சேர்ந்தோர்  ஏற்பார்களா என்பது சந்தேகமே. முதலீட்டில் இட ஒதுக்கீடு என வந்தால், தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களும் சமமாக வந்து நிற்பார்களே,” என்ற சிந்தனையைப் பகிர்ந்துகொண்டோம்.

கிரிக்கெட்டில் தொடங்கிய கட்டுரையைக் கிரிக்கெட்டிலேயே முடிப்போம். தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அணியின் ஆட்டக்காரர்கள் என்று குறிப்பிட்டதற்கு ஒரு காரணம் உண்டு. அது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அணி அல்ல. கார்ப்பரேட் முதலாளிகளின் மனமகிழ் மன்றம் போன்ற வாரியத்தின் அணிதான். அது அவர்களுக்கு ஒரு பெரும் வருவாய் வாரியமாகவும், அதற்கு உதவுகிற வர்த்தக அடையாள அமைப்பாகவும் பயன்படுகிறது.

இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அதன் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டால், வாரியம் இந்திய அரசின் சட்டப்பூர்வ நிறுவனமாக்கப்பட்டால்தான் உண்மையிலேயே இந்திய அணி என்று தேசியக்கொடியை உயர்த்திக் கொண்டாட முடியும். அப்படி அரசின் அணியாகிறபோது, அங்கேயும் இட ஒதுக்கீடு வந்தாக வேண்டும் அல்லவா? கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஒலிம்பிக் சாதனைகளை உறுதிப்படுத்தும் வகையில் எல்லா விளையாட்டு அணிகளிலும் இதனைச் செயல்படுத்த வேண்டிய சூழல் வரும் அல்லவா?  வராவிட்டால் அதற்காகப் போராட முடியும் அல்லவா? போட்டியாளரின் முதுகில் கைவைப்பது தடவிப்பார்க்க அல்ல, தட்டிக்கொடுக்கத்தான் என்ற ஆக்கப்பூர்வ மாற்றம் நிகழுமே!