கஜா புயல் மிகக் கடுமையாக இருக்கும்;   தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

மிழகத்தை  நோக்கி வரும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும் என்றும், வரும் 15-ம் தேதி கடலூர், புதுச்சேரி பகுதியில் இப்புயல் கரையைக் கடக்கும் போது பலத்த காற்றுடன் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்திருக்கிறார்.

தமிழ்நாடு வெதர்மேன் என்று சமூகவலைதளங்களில் எழுதி வரும் ம் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில், கஜா புயல் குறித்து எழுதியிருப்பதாவது:

“தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர இருக்கும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்க வாய்ப்பு உள்ளது.  மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையைக் கடக்கக்கூடும்.

இந்த புயல் 13.5 வடக்கு அட்சரேகையில் தற்போது மையம் கொண்டுள்ளது. . இது மேலும் மேற்கு வடமேற்காக நகர்ந்து வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் நாகை முதல் சென்னை வரை அல்லது புதுச்சேரி அல்லது கடலூர் பகுதிக்கு நகரக்கூடும். . ஆனால், எந்த இடத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று உறுதியாக தற்போது  கூற இயலாது. மேற்கு, தென்மேற்காகப் புயல் நகரும்போது வேகமாக நகரும். ஆதலால், 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடக்கக் கூடும்.

கடந்த நாற்பது வருடஹ்களில் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தமிழகக் கடற்கரையை கடந்த புயலின் அழுத்தம் குறித்த விவரங்களை கீழே அளித்துள்ளேன்.

1. 1978-ம் வருடம் இலங்கை புயல் 953 எம்.பி.(பிரஷர்)

2. 2000—ம் வருடம் கடலூர் புயல் 959 எம்.பி.

3. 1996-ம் வருடம் சென்னை புயல் 967 எம்.பி.

4. 1993-ம் வருடம் காரைக்கால் 968 எம்.பி.

5. 2011-ம் வருடம் தானே 969 எம்.பி.

6. 2000-ம் வருடம் இலங்கை புயல் 970 எம்.பி.

7. 1984ம் வருடம் கடலூர் புயல் 973 எம்.பி.

8. 2016ம் வருடம் வர்தா புயல் 975 எம்.பி.

9. 1984-ம் வருடம் ஹரிகோட்டா புயல் 975 எம்.பி.

ஆகவே  தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் ஆழ்ந்த புயலாக – கடும் புயலாக – கடல்பகுதியில் மிகக் கடும் புயலாக இருக்கும். வடக்கு தமிழக கடற்பகுதியை இப்புயல் நெருங்கும்போது காற்றின் வேகம் மேலும்  அதிகரிக்கும். . மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு உண்டு என்று அமெரிக்க மாடல்கள் கூறுகின்றன. ஆனால், வரும் நாட்களில்தான் அதன் தீவிரத்தன்மை தெரியவரும்.

சென்னை வானிலை மையம் அறிவிக்கும் ரெட் அலர்ட் என்பது புயலோடு தொடர்புடையதாகும். ஆகவே கவனக்குறைவாக இருக்க வேண்டாம். 24 மணிநேரத்தில் 200மிமீ மழையைப் பெய்யவும் வாய்ப்பு உண்டு.

புதுச்சேரி அல்லது கடலூர் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு. பிறகு, புயல் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குள் செல்லும்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கேட்டி, கொடநாடு, கோத்தகிரி பகுதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய பகுதிகளாகும்.

 

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

கடலூரை நோக்கி கஜா புயல் சென்றுவிட்டால் சென்னைக்கு குறைந்த அளவே பாதிப்பு ஏற்படும்.. கடந்த 25 வருடங்களில் புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகையில் புயல் கரையைக் கடக்கும்போது பெய்த மழை அளவு கீழே அளிக்கப்பட்டுள்ளது.

1. 2015-ம் வருடம் நவம்பரில் புதுச்சேரியில் புயல் கரைகடந்த போது சென்னையில் ஒரேநாளில் 200மி.மீ மழை பதிவானது.

2. 2013-ம் வருடம் வில்மா புயலால் சென்னையில் 2 நாட்களில் 110மி.மீ மழை பெய்தது.

3. 2012-ம் வருடம் நிலம் புயலால் சென்னைக்கு 2 நாட்களில் 120 மி.மீ மழை கிடைத்தது.

4. 2011-ம் வருடம் தானே புயலால் கடலூர், சென்னையில் ஒரே நாளில் 100 மி.மீ மழை பெய்தது.

5. 2008-ம் வருடம் நிஷா புயலால் காரைக்கால், சென்னையில் 4 நாட்களில் 400மி.மீ மழை பதிவானது.

இந்தப் புயல்கள் அனைத்தும் தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மேற்குவடமேற்காக நகர்ந்து தமிழகம் நோக்கி வந்தவை. 1996-ம் வருடம் புயல் மட்டும் வடமேற்கு வங்கக்கடலில் இருந்து மேற்குதென்மேற்கு நோக்கி வந்தது.

இதுவரை கணித்தபடி கஜா  கடலூரில் புயல் கரையைக் கடக்கும். சென்னையில் 14-ம் தேதி இரவு அல்லது 15-ம் தேதி காலை முதல் 17-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்.  15-ம் தேதியில் இருந்து காற்றுவீசக்கூடும் ஆனால், பெரிய அளவுக்குப் பாதிப்பு இருக்காது.

வடமேற்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.  கடற்கரைப்பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை இருக்கும். வட மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும். கேரள மாநிலத்தில்கூட மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், கஜா புயலால் தென் மாவட்டங்களுக்குக் குறைவான மழையே பெய்யும்.

நாளை முதல் வடதமிழக கடற்கரை முதல் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிவரை கடல் மிகுந்த ஆவேசமாக இருக்கும். ஆதலால், 16-ம் தேதிவரை கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம். அரபிக் கடலுக்குள் கஜா நகர்ந்தபின், எப்படி மாறுகிறது என்று கணிக்க முடியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதுவரை 23 சதவீதமும், சென்னையில் 52 சதவீதமும் மழை பற்றாக்குறையாக இருக்கறது. . இந்த கஜா புயலால் நமக்கு நல்ல மழை பெற வாய்ப்பு உண்டு.  வேகமாகப் புயல் நகரும்போது, குறைந்தநேரத்தில் அதிகமான மழை பெய்யும்” என்று  வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.