முதன்முதலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக இந்திய அளவில் டிரெண்டிங்காகும் #GoBackStalin ஹேஸ்டேக்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை பிரதமர் மோடி, உள்துறைஅமைச்சர் அமித்ஷா போன்றோருக்கு, எதிராக டிவிட்டர் சமுக வலைதளத்தில் கோபேக் ஹேஸ்டேக் டிரெண்டிங்காகி வந்தது அனைவரும் அறிவோம்.

ஆனால்,  இன்று முதன்முதலாக தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin ஹேஸ்டேக்  டிரெண்டிங்காகி உள்ளது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

முக்குலத்தோரின் உயிர்நாடியாக திகழும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 113வது ஜெயந்தி மற்றும் குருபூஜை இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, அவரது சமாதி அமைந்துள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் சிலைக்கு, அரசியல் கட்சியினர் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதுபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து,  பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட கட்சியினர் நேரில் சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.  மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செல்லும் திமுக தலைவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, #GoBackStalin ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி உள்ளது. இது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்குலத்தோர் சமுதாயத்தினரின் பெரும்பாலான வாங்குகள் அதிமுகவுக்கு ஆதரவாகவே இதுவரை நடைபெற்று வந்த தேர்தல்களில் கிடைத்து வந்துள்ளது. அந்தவாக்குகளை தக்க வைத்துக்கொள்ளவே மறைந்த அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு பலகிலோ தங்கத்தைக் கொண்டு, கவசம் செய்து அணிவித்தார். இதன் காரணமாக  தேவர் சமுதாய மக்களிடையே அதிமுகவுக்கு மேலும் செல்வாக்கு அதிகரித்தது. இதன் காரணமாக அதிமுக தேவர் சமுதாயத்துக்கு ஆதரவான கட்சி என்ற எண்ணம் தமிழக மக்களிடையே எப்போதும் உண்டு. அதே வேளையில் திமுக பட்டியலினத்தவர்களுக்கு ஆதரவான கட்சி என்ற எண்ணமும் மக்களிடையே  பரவலாக உண்டு.

இந்த சூழ்நிலையில், இன்று  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா குருபூஜையை முன்னிட்டு, திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது வரவேற்பை பெற்றிருந்தாலும் சில தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இது இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

 தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற நோக்கில்  பணியாற்றி வரும் திமுகவுக்கு, இன்று டிவிட்டரில் டிரெண்டிங்காகி வரும் #GoBackStalin பெரும் சங்கடத்தை உருவாக்கி உள்ளது.

தேவர் சமுதாய மக்கள் திமுகவை புறக்கணிக்கும் நடவடிக்கையாக, இதை  டிரெண்டிங்காக்கி வருவது, தமிழக அரசிய பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருப்பது மட்டுமின்றி,   தேசிய அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது.