தங்கம் வென்று நாடு திரும்பிய வீராங்கனைக்கு விமான நிலையத்திலேயே நிச்சயதார்த்தம்

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு டெல்லி விமான நிலையத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பெண்கள் மல்யுத்த பிரிவில் முதன் முதலில் தங்கம் வென்ற வினேஷ் போகத் கடந்த சனிக்கிழமை பதக்கத்துடன் இந்தியா திரும்பினார். அப்போது விமான நிலையத்திலேயே நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.

vinesh_phogat_get_engaged

18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 500க்கும் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் ஹர்யானா மாநிலத்தை சேர்ந்த வினேஷ் போகத் பங்கேற்றார்.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில், ஜப்பான் நாட்டு வீராங்கனை யூகி இரியை எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த வினேஷ் போகத் யூகி இரியை தோற்கடித்து வெற்றிப்பெற்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் மல்யுத்தப்பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.

இந்நிலையில் தங்கப்பதக்கத்துடன் கடந்த சனிக்கிழமையன்று வினேஷ் போகத் நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் தங்க மங்கையை பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் என அனைவரும் வரவேற்றனர். அப்போது அனைவரது முன்பாக விமான நிலையத்திலேயே வினேஷ் போகத்திற்கும், அவரது நீண்ட நாள் நண்பரான சோம்வீர் ரதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வினேஷ் போகத் வெற்றி மற்றும் நிச்சயதார்த்தத்தை அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் விமான நிலையத்திலேயே கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.