2021ம் ஆண்டின் முற்பாதிக்குள் சந்திரயான் 3 திட்டப்பணிகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: 2021ம் ஆண்டின் முற்பாதிக்குள் சந்திரயான் 3 திட்டப்பணிகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் அமைச்சர் ஜிதேந்திரா சிங்கிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துமூலம் அவர் பதிலளித்த போது இதை குறிப்பிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், மைக்ரோ கிராவிட்டி தொடர்பாக சில சோதனைகள் ககன்யான் திட்டத்தின் கீழ் நடத்தப்படும்.

இது இந்தியாவின் மனித விண்வெளி பணி. சந்திரயான் 3க்கான தற்காலிக வெளியீட்டு அட்டவணை 2021ம் ஆண்டின் முதல் பாதியாகும். கடந்த காலங்களில் கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்களில் இருந்து கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார்.

உலக வரலாற்றின் முதன்முறையாக நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவிலிருந்து சந்திரயான் 2 அனுப்பப்பட்டது. கடந்த ஜூலை 22ம் தேதி ரூ.978 கோடி செலவில் இஸ்ரோ, சந்திராயன்2 விண்கலத்தை 3,850 கிலோ எடை கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

லேண்டர், ஆர்பிட்டர், ரோவர் ஆகிய மூன்று கலன்களுடன் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் ஆரம்பத்தில், புவியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்தது. பின்னர் படிப்படியாக விலக்கப்பட்டு, நிலவின் திசையை நோக்கி பயணித்து நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சென்றது.

செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று எண்ணப்பட்ட  லேண்டர் ஹார்ட் லேண்டிங் மூலமாக நிலவின் மேற்பரப்பில் வேகமாக போய் மோதியது. அதன் எதிரொலியாக, லேண்டருடனான இஸ்ரோவின் தொடர்பு  முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

எவ்வளவோ முயன்றும் சந்திரயான் 2 லேண்டரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. லேண்டரால் நிகழ்த்தப்பட இருந்த ஆராய்ச்சி பின்னர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.