அதிர்ச்சி: பாலியல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக அரசு பெண் வழக்கறிஞர்!:  

சிறுமியை பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு ஆதரவாக அரசு தரப்பு பெண் வழக்கறிஞரே செயல்படுவதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் இளந்திரை என்ற கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரின்  சிவபாலு 22 வயது இளைஞர்.

இவர், பெரம்பலூர் மாவட்டம் மணகுப்பம் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்துவிட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு பெரம்பலூர் கீழ் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதாடும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்  ஜி.சித்ராதேவி, சிறுமியிடமும் அவரது தாயாரிடமும் தொடர்புகொண்டு, குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சிவபாலுவுக்கு ஆதரவாக பேசியது சர்ச்சையாகி இருக்கிறது.

இதற்கு அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் ஜ.மா.ச.வின் பொதுச்செயலாளர் பி.சுகந்தியிடம் பேசினோம்.

அவர், “சிவபாலு என்கிற இளைஞர் 16 வயது சிறுமியை கடந்த 16.11.17 அன்று கடத்திச் சென்று பலாத்காரம் செய்திருக்கிறார். இதையடுத்துதான் புோக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். பெரம்பலூர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு நடந்து வருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்காக அரசுத்தரப்பு வழக்கறிஞராக ஜி.சித்திராதேவி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இளைஞர் சிவபாலுவுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டிருக்கிறார்.

கடந்த  10.10.18 அன்று வழக்கு விசாரணைக்கு வரும் சூழலில் அதற்கு முந்தைய நாள், சிறுமியையும் அவரது தாயாரையும் போனில் தொடர்புகொண்டிருக்கிறார் சித்ராதேவி.

அப்போது சிறுமியிடம் சிவபாலு உன்னை பலாத்காரம் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் கூறிவிடு என்று வற்புறுத்தியிருக்கிறார்.  சிறுமியின் தாயாரிடமும் இதையே வற்புறுத்தியிருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது” என்றார்.

ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ். வாலண்டினா, “பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் வழக்குகளை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்களை தடுக்க முடியும்.

தவிர சாட்சிகளை மிரட்டுவது, கடத்துவது, கொலை செய்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் பல முக்கிய வழக்குகளில் நடைபெற்று வருகிறது.  சாட்சிகளை பாதுகாப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவதும் மிகமிக அவசியம்.  சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் பல நாடுகளில் உள்ளது. இதுவரை இந்தியாவில் உருவாக்கப்படவில்லை.

வாலண்டினா

இதற்கான சட்டம் இயற்ற வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  தொடர்ந்து   வலியுறுத்தி வருகிறது. ஆசாராம் பாபு ஆசிரமத்தில் நடந்த குழந்தைகள் பலாத்கார வழக்கில் சாட்சிகள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட அனைவரும் காவல்துறை, நீதித்துறை நம்பியே இருக்கிறார்கள். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சாட்சிகளை கலைத்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.

அவர் சிறுமியிடமும் அவரது தாயாரிடமும் குற்றவாளிக்கு ஆதரவாக பேசிய ஆடியோ எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மேலும் சிறுமியும் அவரது தாயாரும் இது குறித்து எங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். பாதுகாப்பும் கோரியிருக்கிறார்கள்.

சுகந்தி

ஆகவே,  பெரம்பலூர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக இருக்கும் சித்ராதேவி   மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு ஒரு பொருத்தமான, திறமையான, வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்கும்” என்றார்.