குறைவான மாணவர்கள் சாப்பிடும் 8ஆயிரம் சத்துணவு மையங்களை மூட தமிழகஅரசு உத்தரவு

சென்னை:

மாநிலம் முழுவதும் குறைவான மாணவ மாணவிகள் பயன்பெற்று வரும் சத்துணவு மையங் களை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி 25க்கும் குறைவான மாணவ மாணவி கள் பயன்பெறும் சுமார் 8 ஆயிரம் மையங்களை மூடும்படி  சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் நோக்கிலும், அவர்களது வருகையை ஊக்கப் படுத்தும் வகையில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும்   43 ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார்  50 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அமைப்பாளர், உதவியாளர் என 2 ஊழியர்கள் வீதம் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்படுகிறது.

ஆனால், சமீப காலங்களாக பள்ளி மாணவ மாணவிகளிடையே சத்துணவு மோகம் குறைந்து வருகிறது. தரமற்ற உணவு, சுத்தமின்மை போன்ற காரணங்களால் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், 25க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்படும் 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட, சமூக நல ஆணையர் அமுதவள்ளி உத்தரவிட்டுள்ளார். அந்த குழந்தை களுக்கு தேவைய மதிய உணவு, அருகிலுள்ள மையங்களில் சமைத்து எடுத்து வந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை சத்துணவு ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ம் தேதி போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.