சென்னை,

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால், புதிய ஓட்டுநர், நடத்துனர் தேவை என பெரும்பாலான போக்குவரத்து அலுவலகங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசுடன்  போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று மாலை முதல் பஸ் போக்குவரத்து தமிழகம் முழுவதும் தடைபட்டுள்ளது.

 

இன்று தொடர்ந்து 2வது நாளாக பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒருசில பஸ்கள் மட்டுமே அவ்வப்போது வந்து செல்கிறது. இதன் காரணமாக இன்று காலை முதலே பஸ் நிலையங்களில் பயணிகள் பரிதவித்து  வருகின்றனர். வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் போன்றோர் பஸ் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுபோல தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள போக்குவரத்து கழக அலுவலக அதிகாரிகளுக்கு புதிய ஆட்களை தற்காலிகமாக நியமனம் செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக  பஸ் நிலையங்கள், போக்குவரத்து பணிமனைகள்  போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது