அப்பல்லோவின் அறிக்கையைத்தான் அரசு வெளியிட்டது: அமைச்சர் கடம்பூர் ராஜு
சென்னை:
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, வெளியான அறிக்கையை, அப்பல்லோ நிர்வாகம் கொடுத்ததாகவும், அதை அப்படியே தமிழக அரசு செய்தித்துறை வெளியிட்டதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி உள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவல் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி, கடந்த 2016ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். அவரது மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது.
இந்த விசாரணை கமிஷன் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், சமீபத்தில், அப்பல்லோ மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் கமிஷனில் ஆஜரானார். அப்போது அவரிடம், ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைக்கும், ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கைக்கு இடையே உள்ள முரண்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஜெ.வின் தனி ஆலோசகர் ராமலிங்கம், நேற்று விசாரணை கமிஷனில் ஆஜரானார். அவரிடமும் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
அப்போது, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான அறிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டதாக, ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம்தான் அறிக்கைகளை வெளியிட்டது. அந்த அறிக்கைகளையே தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை வெளியிட்டது என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்றும், ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை என்றவர், திமுகவிற்குள் வாரிசு சண்டை ஆரம்பமாகிவிட்டது என்றும் கூறினார்.