டில்லி:

பாகிஸ்தான்க்கு துருக்கி நாடு உதவி செய்து வரும் நிலையில், துருக்கிக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளதுடன், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி, மலேசியா உள்பட சில நாடுகள் ஆதரவு தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், காஷ்மீருக்குள் ஊடுருவ நினைக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்து, தயார் நிலையில் உள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில், துருக்கியின் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியா துருக்கி இடையிலான உறவில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது.  பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும்  பாகிஸ்தானுக்கு பிளாக் லிஸ்ட் கொடுக்க வேண்டும் என ஐ.நா சபையில் வலியுறுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி வாக்களித்தது. இதையடுத்து துருக்கி உடனான உறவை துண்டித்துக்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது.  துருக்கியின் பாதுகாப்பு துறை நிறுவனமான அனடோலு ஷிப் யார்டு நிறுவனத்துடன் ஏற்கனவே இந்தியா உறவை முறித்துக் கொண்டது. அதுபோல,  சிரியா மீது துருக்கி தாக்குதல் நடத்துவது தவறு, அங்கு உள்ள குர்து படைகளை துருக்கி தாக்குவது தவறு என்று இந்தியா கருத்து தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், துருக்கி செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிக கவனமாக இருக்க வேண்டும். அங்கு மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி உள்ளது. துருக்கியில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் மத்திய அரசு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.