தமிழக அரசின் அதிவேகம்!  எந்த விசயத்தில் தெரியுமா?

--

த்தனையோ விவகாரங்களில் தமிழக அரசு தாமதமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்தது  உண்டு. தற்போது புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணப்பணிகள் மிக மெதுவாக நடப்பதாகக்கூட புகார்கள் உண்டு. பாதிக்கப்பட்ட பல இடங்களில் நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தக் கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் ஓ.எஸ் மணியனை மக்கள் முற்றுகையிட.. அவர் சுவர் ஏறிக்குதித்து தப்பியோடிய சம்பவமும் நடந்தது.

ஆனால் ஒரு விசயத்தில் தமிழக அரசு மிகவும் அதி வேகத்தில் செயல்பட்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடைக்கானல்  பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் குற்றத்தை உறுதி செய்து கடந்த 2000-ம் வருடம் பிப்ரவரி 2-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து  தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் வன்முறையில்  ஈடுபட்டனர். அதன் போதே தர்மபுரியில் 45 மாணவ மாணவிகள் மற்றும் இரண்டு ஆசிரியர்களுடன் சென்று கொண்டிருந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக தொடருந்தும் அ.தி.மு.க. கும்பலால் மறிக்கப்பட்டது. பிறகு பேருந்துக்கு அக்கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிருடன் தீயில் கருகி பலியானார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இது தொடர்பாக அ.தி.மு.க.வினர் 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. தர்மபுரி நகர அ.தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மாது என்ற ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. சென்னை உயர்நீதிமன்றம் 3 பேரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

கொன்றவர்களில் மூவர்..

உச்சநீதிமன்றன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டபோது, மூவரின் தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக கடந்த 2016-ம் ஆண்டு குறைக்கப்பட்டது.

இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழக சிறைகளில் நீண்ட நாட்களாக உள்ள 1,800 கைதிகளை விடுவிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு முடிவெடுத்தது. அவர்களில் தர்மபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் மூவரின் பெயரையும் சேர்த்து, ஆளுநர் அனுமதிக்காக அனுப்பியது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பேருந்து எரிப்பு சம்பவம் தொடர்பான ஆவணங்களையும் பரிசீலித்தார். இறுதியில் மூவரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய இயலாது என்று ஆளுநர் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் அதே கோப்புகளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஆளுநருக்கு அனுப்பியது. தற்போது அவரும் மூவரின் விடுதலைக்கு இன்று அனுமதி அளித்துவிட்டார்.

இதில்தான் தமிழக அரசு அத்துணை வேகமாக செயல்பட்டிருக்கிறது.

கொலையுண்ட மூவர்..

குற்றவாளிகள் மூவரின் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல்.
ஒப்புதல் அளித்த ஒரு மணி நேரத்திற்குள் அரசாணை பிறப்பிக்கப்படுகிறது, சிறைத் துறை அவர்களை விடுதலை செய்ய உடனடியாக அவசர சுற்றறிக்கை அனுப்புகிறது.

ஆகா.. என்னவொரு வேகம்!

இந்த மூன்று குற்றவாளிகளுக்கான தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாக குறைத்தாலும், அப்போது அது தெரிவித்த கருத்து மிக முக்கிமானது. ஆம்.. அப்போதைய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது:

கொலையாளிகளை விடுவிக்க விரைவாக அரசு உத்தரவு..

அதே நேரம், இக்குற்றவாளிகளின் செயலை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. தனது தீர்ப்பில் ”அரசியல் காரணங்களுக்காக 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டு உள்ளனர். நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் இந்த கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சமூகத்துக்கு எதிரானது. காட்டுமிராண்டித்தனமானது. மிகவும் கொடுமையான செயல்!:

இவர்களுக்காகத்தான் இந்த அதிமுக அரசு இத்தனை துரிதமாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.

(அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த David Manohar  அவர்களது முகநூல் பதிவின் அடிப்படையில்..)